"தென் ஆப்ரிக்கா தொடரில் அதை செஞ்சே ஆகணும்..!"- 'ஒரு கை பார்த்துவிட' கேப்டன் கோலி முடிவு!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய கிரிக்கெட் அணி விளையாடி வென்று இருக்கும் நிலையில், அடுத்ததாக தென் ஆப்ரிக்கா பயணம் செய்ய உள்ளது. அங்கு மூன்று டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி விளையாட இருக்கிறது.
இதில் இந்திய டெஸ்ட் அணிக்கு, விராட் கோலி தலைமை தாங்குவார். அதே நேரத்தில் ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா, முதன் முறையாக கேப்டனாக பொறுப்பு வகிக்க உள்ளார். வரும் 26-ம் தேதி, செஞ்சூரியனில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்க இருக்கிறது. இந்தத் தொடரில் இந்தியாவுக்கு எந்த மாதிரியான சவால்கள் காத்திருக்கின்றன, எந்த விஷயங்களை சாதிக்க வேண்டும் என்பது குறித்து விராட் கோலி வெளிப்படையாக பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது, ‘2018-ம் ஆண்டு நாங்கள் ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றோம். அதை ஒரு முன்னுதரணமாக எடுத்துக் கொண்டு எங்களால் விளையாட முடியும். அப்போது எங்களுக்கு மிகவும் சவாலாக இருந்த ஒரு மைதானத்தில் போட்டியை வென்றோம். எனவே இந்த முறையும் டெஸ்ட் தொடரை நேர்மறையான எண்ணங்களுடனும், தன்னம்பிக்கையுடனும், முனைப்புடன் ஆரம்பித்தால் எந்த வித சவால்களாக இருந்தாலும் அதை ஒரு கை பார்க்க முடியும்.
இதுவரை தென் ஆப்ரிக்காவில் நாங்கள் ஒரு தொடரை முழுமையாக வென்றதில்லை. எனவே, இந்தத் தொடரைப் பொறுத்தவரை அதைச் சாதித்துக் காட்டுவது தான் எங்களது இலக்காக இருக்கும். எதோ ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றி கண்டோம் என்று நாங்கள் இருக்க மாட்டோம். கண்டிப்பாக மொத்த தொடரையும் வெல்வதில் முனைப்பாக இருப்போம்’ என்று தெரிவித்துள்ளார்.
இதுவரை இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவில் 20 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறது. அதில் வெறும் மூன்றில் மட்டும் தான் இந்தியா வெற்றி வாகை சூடியுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு இந்தியா, தென் ஆப்ரிக்கா சென்று விளையாடிய போது கூட, 2 - 1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரில் தோல்வி கண்டது.
இதுவரை ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் இலங்கை ஆகிய அணிகள் மட்டும் தான் தென் ஆப்ரிக்காவை, அவர்கள் மண்ணிலேயே வீழ்த்திய டெஸ்ட் அணிகள் ஆகும். எனவே அந்த சாதனைப் பட்டியலில் இந்தியாவும் இந்த முறை இணைய கோலி தலைமையிலான அணி முழு முயற்சியை செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.
தென் ஆப்ரிக்கத் தொடர் குறித்து கோலி மேலும் பேசுகையில், ‘2018-ம் ஆண்டு தென் ஆப்ரிக்காவில் நாங்கள் வெற்றி பெற்ற பின்னர் தான், ஓர் அணியாக எங்களுக்குள் தன்னம்பிக்கை வளர ஆரம்பித்தது. அதைத் தொடர்ந்து நடந்த இங்கிலாந்து தொடரில் நன்றாக விளையாடினோம். ஆஸ்திரேலியாவில் வெற்றி பெற்றோம். ஆனால் இந்த நாடுகளை விட தென் ஆப்ரிக்கா என்பது ஒரு வித்தியாசமான சேலஞ்ச் தான்.
இங்கு இருக்கும் பிட்ச்-களில் அதிக வேகம் மற்றும் பவுன்ஸ் இருக்கும். எனவே, இங்கு ரன்கள் எடுக்க வேண்டும் என்றால், உங்களின் மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிக் கொண்டு வர வேண்டும். இந்த முறை அணியில் மிகவும் அனுபவம் வாய்ந்த, தன்னம்பிக்கை கொண்ட, முனைப்புடன் செயல்படும் வீரர்கள் இருக்கிறார்கள். எனவே, நாங்கள் எதிர்பார்க்கும் விஷயத்தை தென் ஆப்ரிக்கத் தொடரில் அடைய முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது’ என்று கூறியுள்ளார்.