“விராட் பாய் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும்…”- இந்திய அணியில் இணைந்த தமிழக வீரர் உருக்கம்
முகப்பு > செய்திகள் > விளையாட்டு“ஒரு கேப்டன் ஆக விராட் பாய் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் என்னுள் பதிந்துவிட்டது. அவர் கூறிய ஒரு சின்ன வார்த்தையைக் கூட நான் என் வாழ்நாளில் மறக்கமாட்டேன்” என இந்திய கிரிக்கெட் அணியில் புதிதாக இடம் பெற்றுள்ள தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்ட வெங்கடேஷ் ஐயர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகளில் அதிரடியாக விளையாடி தனக்கான இடத்தை ரசிகர்களின் மனதில் பிடித்த வெங்கடேஷ் ஐயர் தற்போது இந்திய அணியில் இணைந்து விளையாட வாய்ப்புப் பெற்றுள்ளார். மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் தமிழ் பேசும் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவரே வெங்கடேஷ் ஐயர். 2021-ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடி பலரது கவனங்களையும் தன் வசம் ஈர்த்தார். சிறந்த ஆல்-ரவுண்டராக முத்திரைப் பதித்த வெங்கடேஷ் ஐயருக்கு இந்திய அணியில் இடம் பெறுவதற்கான அத்தனைத் தகுதிகளும் உள்ளது என ரசிகர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
டி20 உலகக்கோப்பை போட்டிகளில் நெட் பயிற்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்களுடன் இணைந்து விளையாடி அனுபவம் பெற்ற வெங்கடேஷ் ஐயர் கேப்டன் விராட் கோலி தனக்காக சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் மறக்கப் போவதில்லை எனக் கூறியுள்ளார். மேலும் வெங்கடேஷ், “நெட் பயிற்சிகளின் போது எல்லாம் சீனியர் வீரர்களுடன் விளையாடி பெற்ற அனுபவங்கள் பெரிது. அந்த சமயத்தில் எல்லாம் விராட் பாய் தான் எனக்கு அதிகப்படியான ஊக்கம் அளிப்பார். வேறு எதைப் பற்றியும் கவலைப்படாமல் விளையாட்டில் மட்டுமே கவனம் செலுத்தச் சொல்லுவார்” என்றார்.
மேலும், “நான் சிறப்பாகவே ஆட்டத்தில் செயல்படுவதாகவும் அதனைத் தொடர்ந்து கடைபிடிக்கவும் அறிவுருத்தினார். ஒவ்வொரு சூழலிலும் எப்படி செயல்பட வேண்டும் என்பதையும் விராட் பாய் கற்றுக் கொடுத்தார். அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் என் மனதில் பதிந்துள்ளது. என்றுமே நான் அதை மறக்க மாட்டேன். அடுத்ததாக ரோஹித் சர்மா தலைமையின் கீழ் ப்ளூ ஜெர்சி அணிந்து விளையாட நான் தயாராகிவிட்டேன். ரோஹித் உடனான அனுபவங்களுக்காக காத்திருக்கத் தொடங்கிவிட்டேன்.
ரோஹித் பாய் உடன் விளையாடுவது இன்னும் சுவாரஸ்யமானதாக இருக்கப் போகிறது. நான் நன்றாக விளையாடுவது எனக்குத் தெரியும். ஆனால், இவ்வளவு சீக்கிரமாக இந்திய அணியில் இடம் கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவே இல்லை. ப்ளூ ஜெர்சி அணிந்து விளையாடும் காலம் ஒருநாள் வரும் என்று இருந்த எனக்கு இந்த செய்தி மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது” என உருக்கத்துடன் தெரிவித்துள்ளார் வெங்கடேஷ் ஐயர்.
ஹர்திக் பாண்டியா, ஜடேஜாவுக்குப் பின்னர் இந்திய அணிக்குக் கிடைத்த மிகப்பெரிய ஆல்-ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர் என ரசிகர்கள் வரவேற்கத் தொடங்கி உள்ளனர். இந்திய கிரிக்கெட் அணி மேற்கொள்ள இருக்கும் நியூசிலாந்து ஆட்டத்தொடரில் இருந்து தனக்கான முத்திரையைப் பதிக்கத் தொடங்குவார் வெங்கடேஷ் ஐயர்.