ரோஹித் இல்ல.. இந்திய டி20 அணிக்கு ‘கேப்டன்’ இவர்தானா..? கசிந்த தகவல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய டி20 கிரிக்கெட் அணிக்கு அடுத்த இளம் வீரர் ஒருவர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை (T20 World Cup) தொடரில் இந்திய அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இதுவரை இரண்டு போட்டிகளில் இந்தியா விளையாடியுள்ளது. அதில் பாகிஸ்தானுக்கு எதிராக 10 விக்கெட் வித்தியாசத்திலும், நியூஸிலாந்துக்கு எதிராக 8 விக்கெட் வித்தியாசத்திலும் தோல்வியை தழுவியது.
இதனால் இந்திய அணியின் நெட் ரன்ரேட் (-1.609) வெகுவாக குறைந்துள்ளது. இதன்காரணமாக இந்தியா அரையிறுதிக்கு செல்ல வாய்ப்பு இல்லை என சொல்லப்படுகிறது. இந்திய நிலையில் டி20 உலகக்கோப்பை தொடர் முடிந்ததும், நியூஸிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.
இதில் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடருடன் இந்திய டி20 அணிக்கான கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி (Virat Kohli) விலகுவதாக அறிவித்துள்ளார். அதனால் அடுத்த கேப்டன் யார்? என கேள்வி எழுந்து வருகிறது. இதனிடையே ரோஹித் ஷர்மா (Rohit Sharma) கேப்டனாக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்பட்டது.
இந்த நிலையில், நியூஸிலாந்து எதிரான டி20 கிரிக்கெட் தொடரில், இளம் விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் (KL Rahul) கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. டி20 உலகக்கோப்பை தொடர் முடிவடைந்ததும் விராட் கோலி, ரோஹித் ஷர்மா, பும்ரா, முகமது ஷமி, ஜடேஜா உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட உள்ளதாக தெரிகிறது. அதனால் கே.எல்.ராகுலை கேப்டனாக நியமிக்க அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.