‘ஆஹா இதுமட்டும் அன்னைக்கு நடந்திருக்க கூடாதா..!’ டாஸ் ஜெயிச்சதும் சிரிச்சிக்கிட்டே ‘கோலி’ சொன்ன பதில்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்றதும் விராட் கோலி கூறிய பதில் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.
இந்தியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை போட்டி நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி, 17.4 ஓவர்களில் 85 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய அணியைப் பொறுத்தவரை ஜடேஜா மற்றும் முகமது ஷமி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், பும்ரா 2 விக்கெட்டும், அஸ்வின் 1 விக்கெட்டும் எடுத்தனர். இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி, 6.3 ஓவர்களில் 89 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 50 ரன்களும், ரோஹித் ஷர்மா 30 ரன்களும் எடுத்தனர்.
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்றைய போட்டியில்தான் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதல்முறையாக டாஸ் வென்றார். மேலும் நேற்று அவர் தனது 33-வது பிறந்த நாளை கொண்டாடினார். இந்த சூழலில் டாஸ் வென்ற பின் பேசிய விராட் கோலி, ‘என் பிறந்த நாளன்று நாங்கள் டாஸ் வென்றுள்ளோம். எனது பிறந்தநாளன்று முதல் போட்டி இருந்திருக்கலாம்’ என சிரித்துக்கொண்டே விராட் கோலி கூறினார்.
முன்னதாக, இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்து விளையாடியது. அப்போட்டியில் பாகிஸ்தான் டாஸ் வெற்றி பெற்றதால், இந்தியாவை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்களை எடுத்தது.
இதனை அடுத்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, விக்கெட் இழப்பின்றி 152 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. உலகக்கோப்பை வரலாற்றில் இந்தியாவை பாகிஸ்தான் ஒருமுறை கூட வீழ்த்தியது கிடையாது. இந்த சாதனையை அப்போட்டியில் பாகிஸ்தான் தகர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.