'கடைசி' ஓவரில் கட்டம் கட்டி வீசிய 'நட்டு'... அவருக்கு கிடைத்த வேற லெவல் 'பாராட்டு'... "சத்தியமா இத யாருமே எதிர்பாத்துருக்க மாட்டாங்க!!"
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற கடைசி ஒரு நாள் போட்டியில், இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி அசத்தியிருந்தது.
இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 329 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி, தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது, அந்த அணியின் இளம் வீரர் சாம் குர்ரான் (Sam Curran), தனி ஆளாக நின்று, இந்திய அணிக்கு பரபரப்பை உண்டு பண்ணினார்.
இதனால், இறுதி ஓவரில், இங்கிலாந்து அணியின் கைவசம் 2 விக்கெட்டுகள் இருக்க, அந்த அணியின் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது. இந்த ஓவரை வீசிய தமிழக வீரர் நடராஜன் (Natarajan), மிகக் கச்சிதமாக பந்து வீசி, 6 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து, 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார்.
நடராஜனின் சிறப்பான பந்து வீச்சுக்கு அனைவரும் பாராட்டுக்களை வழங்கி வரும் நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகனும், தனது பங்கிற்கு பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.
'தற்போதைய கிரிக்கெட் உலகில் யார்க்கர் பந்துகளை வீசுவது என்பது மிகவும் குறைந்து வரும் ஒன்றாகும். உலகளவில் நடைபெறும் டி 20 லீக் தொடர்களில், பல பந்து வீச்சாளர்கள், யார்க்கர் பந்துகளை துல்லியமாக வீசுவதாக நீங்கள் நினைப்பீர்கள். ஆனால், அதனை வீசுவது என்பது மிகவும் கடினமான ஒன்று. அதனை சற்று தவறாக வீசினால் கூட, பேட்ஸ்மேன்கள் நிச்சயம் சிக்சருக்கு விரட்டி விடுவார்கள்.
ஆனால், மிகவும் பதற்றமான ஒரு தருணத்தில், நடராஜன் சிறப்பாக பந்து வீசினார். சாம் குர்ரான் அடிக்க முடியாத அளவுக்கு, பந்துகளை துல்லியமாக வீசினார் நடராஜன். இத்தனை பார்வையாளர்கள் கவனிக்கும் ஒரு போட்டியில், நடராஜனின் இதய துடிப்பு என்பது எப்படி இருந்திருக்கும்?. ஆனாலும், தக்க நேரத்தில் யார்க்கர் பந்துகளை சரியாக வீசிய நடராஜனுக்கு தான் அனைத்து பாராட்டுக்களும் சாரும்' என மைக்கேல் வாகன், நடராஜனை பாராட்டித் தள்ளியுள்ளார்.
முன்னதாக, நடராஜனின் கடைசி ஓவர் பற்றி, சாம் குர்ரான் கூட பாராட்டி கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.