"அட, என்னங்க இவரு.. எப்பவும் எதையாவது சொல்லிட்டே இருக்காரு..." மீண்டும் 'வாகன்' போட்ட 'ட்வீட்'... கோபத்தின் உச்சத்திற்கே சென்ற 'ரசிகர்கள்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளிடையேயான இன்று நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில், இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில், 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 317 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷிகர் தவான் 98 ரன்கள் எடுத்திருந்தார். அதே போல, ஒரு நாள் போட்டியில் இன்று அறிமுகமான க்ருணால் பாண்டியா, அரை சதம் அடித்து சாதனை படைத்திருந்தார்.
தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி, ஆரம்பத்தில் அதிரடியாக ஆடிய போது, இந்திய அணி தோல்வி பெறும் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், அறிமுக வீரர் பிரஷித் கிருஷ்ணா, முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்திய அணி வெற்றி பெற வழி செய்தார். இறுதியில், 251 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இங்கிலாந்து அணி இழந்தது. அதிகபட்சமாக, பிரஷித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்திய அணி முன்னிலை வகிக்கும் நிலையில், இங்கிலாந்து அணியின் மைக்கேல் வாகன் செய்துள்ள ட்வீட் ஒன்று, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, டி 20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த போது, இந்திய அணியை விட மும்பை இந்தியன்ஸ் அணி, எத்தனையோ மேல் என கிண்டல் செய்திருந்தார். அதன் பிறகு, இந்திய அணி வெற்றி பெற்ற போது, மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் ஆகியோர் சிறப்பாக ஆடியிருந்தனர்.
நான் சொன்னதைக் கேட்டு, மும்பை வீரர்களை எடுத்ததால் தான் இந்திய அணி வெற்றி பெற்றது என்றும் இந்திய அணியை கிண்டல் செய்திருந்தார் வாகன். தற்போது, மற்றொரு மும்பை வீரரான க்ருணால் பாண்டியா, இன்றைய ஒரு நாள் போட்டியில், அதிவேகமாக அரை சதமடித்த அறிமுக வீரர் என்ற சாதனையை படைத்தார். இதனைக் குறிப்பிட்டு ட்வீட் செய்த வாகன், 'இன்று சிறப்பாக ஆடிய க்ருணால் பாண்டியா, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடியுள்ளார் என்பதை நினைவுபடுத்திக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.
Just to let you all know @krunalpandya24 plays for the @mipaltan !!!! #INDvENG
— Michael Vaughan (@MichaelVaughan) March 23, 2021
வாகனின் இந்த பதிவு, இந்திய ரசிகர்களிடையே கடுப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய போட்டியில், ஷிகர் தவான், கே எல் ராகுல் மற்றும் கோலி ஆகியோரும் சிறப்பாக ஆடியிருந்தனர். ஆனால், இவர்கள் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் இல்லை. இருந்த போதும், தொடர்ந்து, இந்திய அணியை ஐபிஎல் அணியுடன் ஒப்பிட்டு வாகன் கருத்து தெரிவித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
