‘என்னோட வீக்னஸ் அவருக்கு நல்லா தெரியும்’.. நியூஸிலாந்து வீரர் பற்றி சிரிச்சிக்கிட்டே ரோஹித் சொன்ன பதில்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளர் குறித்து ரோஹித் ஷர்மா நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.
இந்தியா மற்றும் நியூஸிலாந்துக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேற்று ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக மார்டின் கப்தில் 70 ரன்களும், மார்க் சாப்மேன் 63 ரன்களும் எடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து 165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் ரோஹித் ஷர்மா களமிறங்கினர். இதில் 15 ரன்கள் எடுத்திருந்தபோது மிட்செல் சான்ட்னர் ஓவரில் கே.எல்.ராகுல் ஆட்டமிழந்தார்.
இதனை அடுத்து ஜோடி சேர்ந்த ரோஹித் ஷர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் கூட்டணி, நியூஸிலாந்து பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. இதில் 48 ரன்கள் அடித்திருந்தபோது எதிர்பாராதவிதமாக டிரெண்ட் போல்ட் ஓவரில் ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து வந்த ரிஷப் பந்துடன் ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் (62 ரன்கள்) அதிரடி காட்ட ஆரம்பித்தார். இதனால் 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து இந்தியா வெற்றி பெற்றது.
இந்த நிலையில் போட்டி முடிந்தபின் பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவிடம், டிரெண்ட் போல்ட்டின் ஓவரில் அவுட்டானது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், ‘நாங்கள் இருவரும் இணைந்து நிறைய கிரிக்கெட் விளையாடியுள்ளோம். அதனால் என்னுடைய பலவீனம் என்ன என்பது அவருக்கு நன்றாக தெரியும், அதேபோல் அவருடைய பலம் என்ன என்பது எனக்கும் தெரியும். இதுவொரு ஆரோக்கியமான சண்டை’ என சிரித்துக்கொண்டே ரோஹித் ஷர்மா கூறினார்.
ரோஹித் ஷர்மாவும், டிரெண்ட் போல்ட்டும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் சார்பாக விளையாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.