எந்த டீமும் பண்ணாத ‘தப்பு’.. இதுதான் இந்தியாவோட தோல்விக்கு முக்கிய காரணம்.. தவறை சுட்டிக்காட்டிய ஹர்பஜன் சிங்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி20 உலகக்கோப்பை தொடரில் நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததற்கான காரணத்தை ஹர்பஜன் சிங் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியா மற்றும் நியூஸிலாந்துக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை (T20 World Cup) லீக் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஜடேஜா 26 ரன்கள் எடுத்தார்.
இதனை அடுத்து பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி, 14.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது. இப்போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம், இந்திய அணி அரையிறுதிக்கு செல்வது கேள்விக்குறியாகியுள்ளது.
இந்த நிலையில், நியூஸிலாந்துக்கு எதிராக இந்தியா தோல்வியடைந்ததற்கான காரணங்களை இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் (Harbhajan Singh) சுட்டிக் காட்டியுள்ளார். அதில், ‘நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில், இந்திய அணி மொத்தமாக 54 டாட் பால் வைத்துள்ளது. அதாவது 9 ஓவர்களில் ரன்களே அடிக்காமல் வீணடித்துள்ளனர். எனக்கு தெரிந்து டி20 கிரிக்கெட்டில் எந்தவொரு அணியும் இவ்வளவு பந்துகளை வீணடித்திருக்காது. டாட் பாலாக விட்ட ஒவ்வொரு பந்திலும் 1 ரன் அடித்திருந்தால் கூட நம்மால் பெரிய அளவில் ரன்களை குவித்திருக்க முடியும். அதனால் போட்டியின் முடிவுகள் மாறியிருக்க வாய்ப்புள்ளது. இதுதான் இந்தியா செய்த மிகப்பெரிய தவறு’ என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கவில்லைதான், ஆனால் நியூஸிலாந்து சுழற்பந்து வீச்சாளர்கள் மிகவும் நன்றாகவே வீசினர். பொதுவாக இந்திய பேட்ஸ்மேன்கள் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக நன்றாக விளையாடுவார்கள். ஆனால் இப்போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்கள் வீசிய ஓவரில் சிங்கிள் எடுக்கவே இந்திய வீரர்கள் சிரமப்பட்டனர். இந்த அழுத்தம் தான், விராட் கோலி போன்ற திறமையான வீரர்களைக் கூட தவறான ஷாட்டை அடித்து அவுட்டாக்கியது’ என இந்திய அணி செய்த தவறுகளை ஹர்பஜன் சிங் சுட்டிக்காட்டியுள்ளார்.