“மிகச்சிறந்த வீரரை நாடு இழந்துள்ளது”.. கார் விபத்தில் உயிரிழந்த தமிழக இளம் டேபிள் டென்னிஸ் வீரர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதமிழகத்தைச் சேர்ந்த இளம் டேபிள் டென்னிஸ் வீரர் மேகாலய மாநிலத்தில் கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேகாலயாவில் 83-வது தேசிய டேபிள் டென்னிஸ் போட்டி நடைபெறுகிறது. இதற்காக அசாம் மாநிலம் கவுகாத்தி நகரிலிருந்து கார் மூலம் ஷில்லாங்கிற்கு தமிழக அணி வீரர்கள் 4 பேர் சென்றனர். ரி-போய் என்ற மாவட்டத்தில் சாலை வளைவில் திரும்பும்போது எதிரே வேகமாக வந்த லாரி, இவர்களது கார் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே கார் ஓட்டுநர் உயிரிழந்தார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட தமிழக வீரர்களில் விஸ்வா தீனதயாளன் (வயது 18) மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
தமிழக டேபிள் டென்னிஸ் அணியின் மற்ற வீரர்களான ரமேஷ் சந்தோஷ்குமார், அபினேஷ், கிஷோர்குமார் ஆகியோர் படுகாயங்களுடன் ஷில்லாங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜூனியர் பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டிகளில் பல பதக்கங்களை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தவர் விஸ்வா தீனதயாளன். இவர் அடுத்த வாரம் ஆஸ்திரியாவில் நடைபெறவுள்ள சர்வதேச போட்டியில் பங்கேற்க இருந்தார்.
விஸ்வா தீனதயாளன் மரணத்திற்கு மேகாலயா முதல்வர் கான்ரட் சங்மா, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மிகச்சிறந்த வீரரை நாடு இழந்திருப்பதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், ‘நமது நம்பிக்கைக்குரிய இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளனின் அகால மரணம் பற்றி கேள்விப்பட்டு வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவு அதிர்ச்சி அடைந்தேன். இளம் சாதனையாளராக உருவாகி கொண்டிருந்த அவர் இவ்வளவு சீக்கிரம் நம்மை விட்டு பிரிந்தது எனக்கு வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் விளையாட்டுத் துறையை சேர்ந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.இந்த நிலையில் மறைந்த டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளனின் உடல் இன்று தமிழகம் கொண்டுவரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.