10 அடி பள்ளத்துக்குள் திடீரென பாய்ந்த கார்.. காருக்குள் இருந்த தம்பதி.. பரபரப்பு சம்பவம்..
முகப்பு > செய்திகள் > தமிழகம்பண்ருட்டி அருகே 10 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கார் ஒன்று தலைகீழாக கவிழ்ந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கோண்டூர் பகுதியில் சாலை விரிவாக்க பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக 10 அடி ஆழமுள்ள குழிகள் அப்பகுதியில் தோண்டப்பட்டுள்ளன. இங்கே வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
விபத்து
இந்நிலையில் செம்மண்டலம் பகுதியைச் சேர்ந்த முஷாரப் மற்றும் அவரது மனைவி அந்த வழியாக காரில் பயணித்திருக்கின்றனர். அப்போது துரதிருஷ்டவசமாக முஷாரப் ஓட்டிச்சென்ற கார் பள்ளத்திற்குள் பாய்ந்திருக்கிறது. இதனை அடுத்து அக்கம் பக்கத்தினர் அச்சத்துடன் ஓடிவந்து உள்ளே இருந்த முஷாரப் மற்றும் அவரது மனைவியை காரில் இருந்து மீட்டுள்ளனர். அதன்பிறகு இயந்திரங்கள் மூலமாக கார் வெளியே எடுக்கப்பட்டு உள்ளது.
கார் 10 அடி ஆழத்தில் விழுந்தாலும், முஷாரப் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இருப்பினும் காருக்கு சேதம் ஏற்பட்டதாக தெரிகிறது.
என்ன காரணம்?
கோண்டூர் பகுதியில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெறும் இடத்தில் வாகன தடுப்பு அமைக்கப்படவில்லை எனத் தெரிகிறது. மேலும், இரவில் செல்லும் வாகனங்களுக்கு உதவும் வகையில் மின்சார விளக்குகளும் இல்லாததன் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
10 அடி பள்ளத்திற்குள் கார் சிக்கியதை மீட்புப் படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, நிலைமையை சரி செய்தனர். இதன் காரணமாக பண்ருட்டி - கோண்டூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கோரிக்கை
பொது மக்கள் போக்குவரத்திற்கு பாதுகாப்பான சாலையை ஒதுக்கி கொடுத்துவிட்டு, சாலை விரிவாக்க பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
கடலூர் அருகே 10 அடி பள்ளத்திற்குள் கார் ஒன்று தலைகீழாக கவிழ்ந்து விபத்தை சந்தித்தது அப்பகுதி மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

மற்ற செய்திகள்
