"போன 'வருசம்' எங்க நேரமே சரியில்ல.. நாங்க ரொம்ப 'மோசமா' ஆடுனதுக்கு காரணமே இது தான்.." மனம் திறந்த 'தீபக் சாஹர்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு14 ஆவது ஐபிஎல் சீசன், இந்தியாவில் மிகவும் சிறப்பாக நடைபெற்று வந்த நிலையில், சில அணிகளைச் சேர்ந்த வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், போட்டி பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது.

மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ள நிலையில், இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகளின் அடிப்படையில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி, புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
பவுலிங், பேட்டிங் என இரண்டிலும் பட்டையைக் கிளப்பிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த முறை கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. ஆனால், கடந்த ஆண்டு, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றிருந்த 13 ஆவது ஐபிஎல் சீசனில், சென்னை அணி மோசமாக ஆடியிருந்தது.
அணியில் இருந்த சீனியர் வீரர்கள் அதிகம் சொதப்பியிருந்த நிலையில், புள்ளிப் பட்டியலில் 7 ஆவது இடம் பிடித்த சிஎஸ்கே, முதல் முறையாக பிளே ஆஃப் சுற்றுக்குக் கூட முன்னேறாமல் வெளியேறி அதிக விமர்சனத்தை சந்தித்திருந்தது. இதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டில் வேற லெவலில் கம்பேக் கொடுத்த சென்னை அணி, மற்ற அணிகள் அனைத்தையும் அதிகம் அச்சுறுத்தி வருகிறது.
இந்நிலையில், ஐபிஎல் தொடர்களிலேயே பலம் வாய்ந்த சென்னை அணி, கடந்த சீசனில் மோசமாக ஆடியதற்கான காரணம் என்ன என்பது பற்றி, சென்னை அணியில் இடம்பெற்றுள்ள வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் (Deepak Chahar) கருத்து தெரிவித்துள்ளார்.
'2020 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன் ஆரம்பிப்பதற்கு முன்னர் இருந்த சூழ்நிலை, எங்களுக்கு மிகவும் மோசமாக அமைந்தது. மேலும், எங்களது அணியில் இடம்பெற்றிருந்த பல வீரர்கள் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் ஆடுபவர்களில்லை. இதனால், எங்களுக்கு அதிகம் பயிற்சி தேவைப்பட்டது.
இதற்காக, விரைவில் நாங்கள் துபாய் செல்ல விரும்பிய போதும், எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக, சென்னையில் 5 முதல் 6 நாட்கள் சிறிய பயிற்சி முகாமிட்டோம். அதன் பிறகு, எனக்கும் கொரோனா தொற்று உறுதியாகி, 16 - 17 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தேன். ருதுராஜ் கெய்க்வாட்டும் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட, அவரும் 28 நாட்கள் வரை தனிமைப்படுத்தப்பட்டார்.
நீங்கள் ஒரு பவுலராக இருந்து, உங்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டால், 20 முதல் 25 நாட்களுக்குள் மீண்டு, சிறந்த நிலைக்கு திரும்புவது மிகவும் கடினம். அதே போல, ரெய்னாவும் அணியில் இல்லாதது, எங்களது பேட்டிங்கை பலவீனமாக்கியது. அவர் இல்லாமல் போகும் போது, தவறிய அணியின் சமநிலை, தற்போது அவர் மீண்டும் வந்த பிறகு சரி செய்யப்பட்டுள்ளது' என தீபக் சாஹர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
