‘கடைசி பால், 6 ரன் தேவை’.. இந்த மாதிரி நேரத்துல ‘தோனி’-க்கு எப்படி பந்து வீசுவீங்க..? ரசிகர் எழுப்பிய கேள்விக்கு சூப்பர் பதில் சொன்ன பேட் கம்மின்ஸ்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளாரான பேட் கம்மின்ஸ், தோனிக்கு கடைசி கட்ட ஓவர்கள் வீசுவது குறித்து பேசியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பேட் கம்மின்ஸ், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் சார்பாக விளையாடி வருகிறார். இந்த வருடம் நடந்த ஐபிஎல் தொடர் கொரோனா தொற்று காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டதால், கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் அவரவர் சொந்த நாட்டுக்கு திரும்பியுள்ளனர்.
இந்த நிலையில் தனது யூடியூப் சேனலில் ரசிகர்களின் கேள்விக்கு பேட் கம்மின்ஸ் பதிலளித்து வந்தார். அப்போது ரசிகர் ஒருவர், 1 பந்துக்கு 6 ரன்கள் அடிக்க வேண்டிய சூழல் இருக்கும்போது தோனிக்கு நீங்கள் எந்த மாதிரி பந்து வீசுவீர்கள்? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த பேட் கம்மின்ஸ், ‘கடைசி கட்ட ஓவர்களில் பல பவுலர்கள் தோனிக்கு யார்க்கர் பந்துகளை வீச நினைப்பார்கள். ஆனால் பவுலர்கள் அதை தவறவிடும்போது, அந்த பந்தை தோனி சிக்சருக்கு பறக்கவிட்ட பல வீடியோக்களை பார்த்திருக்கிறேன்.
அதனால் ஒருபோதும் அவருக்கு யார்க்கர் பந்துகளை நான் வீச மாட்டேன். ஒரு ஸ்லோவர் பந்தையோ அல்லது ஸ்பைன்சரையோ தான் வீச நினைப்பேன். முடிந்த அளவு தோனிக்கு எதிராக கடைசி கட்ட ஓவர்களில் நான் பந்து வீசுவது தவிர்ப்பேன்’ என பேட் கம்மின்ஸ் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘ஐபிஎல் தொடர் திடீரென நிறுத்தப்பட்டதும் எனக்கு வருத்தமாக இருந்தது. மறுபடியும் ஐபிஎல் தொடர் நடைபெறும்போது நாங்கள் வலுவான அணியாக மீண்டும் வருவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது’ என பேட் கம்மின்ஸ் தெரிவித்தார்.