"அவங்கள எல்லாம் தோக்கடிக்க இந்தியாவோட 'C' டீமே போதும்.. சும்மா 'ஃபயரா' இருக்காங்க.." 'முன்னாள்' வீரர் 'அதிரடி' கருத்து!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் போட்டிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அடுத்ததாக நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியை, கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்நோக்கி காத்து வருகின்றனர்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ள இந்த போட்டி, இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் மைதானத்தில் ஜூன் மாதம் 18 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் செப்டம்பர் 14 ஆம் தேதி வரை, இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும், இந்திய அணி பங்கேற்கிறது.
இதற்காக, கிட்டத்தட்ட 3 மாதங்கள் வரை இங்கிலாந்தில், இந்திய அணி முகாமிடவுள்ளது. இதற்கிடையே, ஜூலை மாதத்தில், இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணமும் மேற்கொள்ளவுள்ளது. அந்த சமயத்தில், இந்திய வீரர்கள் இங்கிலாந்தில் இருப்பார்கள் என்பதால், டெஸ்ட் தொடரில் தேர்வாகாத ஷிகர் தவான், ஹர்திக் பாண்டியா, பிரித்வி ஷா உள்ளிட்ட வீரர்களைக் கொண்ட இந்திய 'ஏ' அணி, இலங்கைக்கு செல்லவுள்ளது.
இலங்கை அணிக்கு எதிராக ஒரு நாள் தொடர் மற்றும் டி 20 தொடர்களில் இந்திய அணி மோதவுள்ள நிலையில், இந்தாண்டு அக்டோபர் மாதத்திற்கு பிறகு, டி 20 உலக கோப்பை போட்டிகளும் நடைபெறவுள்ளதால், இளம் வீரர்களையும் அதற்காக தயார் செய்யும் நோக்கில் தான் பிசிசிஐ தற்போது ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், தற்போதைய இந்திய அணி குறித்து, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கம்ரன் அக்மல் (Kamran Akmal), சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். 'இந்தியாவின் கிரிக்கெட் கலாச்சாரம் மிகச் சிறப்பாக உள்ளது. அப்படிப்பட்ட இந்திய அணியால், ஒரே நேரத்தில் மூன்று சர்வதேச அணிகளைக் கூட உருவாக்க முடியும்.
இதற்கு மிக முக்கிய காரணம், அவர்கள் அடித்தளத்தில் இருந்து இளம் வீரர்களை அற்புதமாக உருவாக்குவது தான். இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட், கடந்த 7 - 8 ஆண்டுகளாக பிசிசிஐ-க்கு வேண்டி பணிபுரிந்து வருகிறார். அவர் இளம் வீரர்களை ஆரம்பத்தில் இருந்தே மெருகேற்றிய விதம், இன்று இந்திய அணியை வேறு ஒரு இடத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. அவர் தயார்படுத்தி அனுப்பும் இளம் வீரர்களை, சர்வதேச போட்டிகளில் ரவி சாஸ்திரி இன்னும் மெருகேற்றுகிறார்.
இதனால், இந்திய அணியின் மூன்றாவது அணியை இலங்கைக்கு அனுப்பினால் கூட, அவர்கள் இலங்கை அணியை எளிதில் வீழ்த்தி விடுவார்கள். அந்த அளவுக்கு இந்திய அணி வலுவாக உள்ளது' என கம்ரன் அக்மல் தெரிவித்துள்ளார்.