'டி20 போட்டியில் அஸ்வின்'... 'இடம் கிடைக்க இது தான் முக்கிய காரணமா'?... 'அவரை நோண்டாம இருக்கவே முடியாதா'?... சர்ச்சையைக் கிளப்பும் முன்னாள் கேப்டன்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்குப் பின்னர் குறைந்த ஓவர் கிரிக்கெட் போட்டியில் அஸ்வினுக்குத் தற்போது வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. நேற்று நடக்க வேண்டிய 5வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்திய அணி நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க இந்த டெஸ்ட் தொடரில் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு ஒரு போட்டியில் கூட விளையாடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் ரசிகர்கள் கேப்டன் கோலியைத் திட்டி தீர்த்தார்கள். இந்த சூழ்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் 20 ஓவர் உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதில் அஸ்வினின் பெயரும் இடம்பெற்றிருந்தது.
சொல்லப்போனால் 4 ஆண்டுகளுக்குப் பின்னர் குறைந்த ஓவர் கிரிக்கெட் போட்டியில் அஸ்வினுக்குத் தற்போது வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகப் பேசிய இந்தியாவின் முன்னாள் கேப்டனும், இன்னாள் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர், 'அஸ்வினை இந்திய அணியில் மீண்டும் சேர்த்துள்ளது நல்ல செய்தி தான். ஆனால் விளையாடும் 11 பேரில் அவர் இடம் பெறுவாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வாய்ப்பு வழங்கப்படாத நிலையில், அவரை ஆறுதல் படுத்துவதற்காக இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டிருக்கலாம்' என்று சூசகமாகப் பேசியுள்ளார். ஏற்கனவே அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது கவாஸ்கர் பேசியுள்ளது மீண்டும் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.