‘சிஎஸ்கே அணியை பிடிக்காம போனதுக்கு’... ‘பிரபல இந்திய வீரர் சொன்ன காரணம்’!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Sangeetha | Sep 30, 2019 06:10 PM
தனக்கு ஏன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பிடிக்காது என்று இந்திய வீரரான ஸ்ரீசாந்த் தற்போது ரகசியம் உடைத்துள்ளார்.

கடந்த 2013-ம் ஆண்டு ஐபிஎல் போட்டியின்போது, சூதாட்டப் புகாரில் சிக்கிய ஸ்ரீசாந்த், சமீபத்தில்தான் அந்த வழக்கில் நிரபராதி என்று நிரூபிக்கப்பட்டு, தடையில் இருந்து விடுபட்டார், இதற்கிடையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்த பேடி அப்டன், தன் சுயசரிதை புத்தகத்தில், டிராவிட் தலைமையில் ஸ்ரீசாந்த் ஆடினார். அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரானப் போட்டியில், ஸ்ரீசாந்த் தேர்வு செய்யப்படாததால், தன்னையும், கேப்டன் டிராவிட்டையும் ஸ்ரீசாந்த் திட்டியதாக கூறப்பட்டு இருந்தது.
ஸ்ரீசாந்த் மேட்ச் பிக்ஸிங் செய்யும் நோக்கத்தில் தான் அன்று அப்படி நடந்து கொண்டார் என்று தெரிவித்து இருந்தார். இந்நிலையில், பேடி அப்டனின் கூற்றை மறுத்த ஸ்ரீசாந்த், தான் அன்று அப்படி நடந்து கொள்ள என்ன காரணம் என்பதை பற்றி கூறினார். ‘தனக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பிடிக்காது என்றும், அதனால் தான் அன்று அந்த அணிக்கு எதிராக ஆட வேண்டும் என்ற நோக்கத்தில், பல முறை அப்டனிடம், தன்னை அணியில் சேர்த்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் வைத்ததாக கூறி உள்ளார்.
மேலும், எல்லோருக்கும் நான் எந்த அளவுக்கு சிஎஸ்கே அணியை வெறுப்பேன் என்பது தெரியும். சிலர் எனக்கு தோனியை பிடிக்காது, உரிமையாளர் சீனிவாசனை பிடிக்காது என்று நினைத்திருப்பார்கள். ஆனால், அது உண்மை அல்ல. எனக்கு மஞ்சள் நிறம் பிடிக்காது. நான் மஞ்சள் நிறத்தை வெறுக்கிறேன். அந்த காரணத்தால் தான், நான் ஆஸ்திரேலிய அணியையும் வெறுத்தேன். மேலும், நான் சிஎஸ்கே அணிக்கு எதிராக சிறப்பாக ஆடி இருந்தேன். அதனால் தான் நான் அந்த அணிக்கு எதிராக விளையாட விரும்பினேன்’ என்றார்.
