விண்வெளியிலிருந்து வந்த FIFA உலகக்கோப்பை கால்பந்து.. அடேங்கப்பா இது புதுசா இருக்கே.. ஆச்சர்ய பின்னணி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகத்தாரில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை தொடருக்காக இரு கால்பந்துகள் விண்வெளிக்கு சென்று திரும்பி இருக்கின்றன. இது உலகம் முழுவதிலும் உள்ள கால்பந்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட விளையாட்டு கால்பந்து. சாதாரண போட்டிகளுக்கே மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். அப்படியிருக்க உலகக்கோப்பை என்றால் சொல்லவா வேண்டும்? மத்திய கிழக்கு நாடான கத்தாரில் இந்த ஆண்டுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் கால்பந்து உலகக்கோப்பை நடைபெற்ற நிலையில், தற்போது கத்தாரில் துவங்கி நடைபெற்று வருகிறது.
நடப்பு உலகக்கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதி சுற்றுக்குள் பிரான்ஸ், மொரோக்கோ, அர்ஜென்டினா மற்றும் குரேஷியா ஆகிய அணிகள் நுழைந்தன. நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் அர்ஜென்டினா குரேஷியாவை எதிர்த்து விளையாடியது. இதில் 3-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா வெற்றி பெற்று உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்குள் நுழைந்திருக்கிறது.
இந்நிலையில், இந்த தொடரில் பயன்படுத்தப்படும் இரண்டு கால்பந்துகள் விண்வெளிக்கு சென்று மீண்டும் பூமிக்கு திரும்பி இருக்கின்றன. உலக பணக்காரர்கள் பட்டியலில் டாப்பில் இருப்பவர் எலான் மஸ்க். இவருடைய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் இந்த திட்டத்தை முன்னெடுத்திருக்கிறது. அதன்படி, இரண்டு கால்பந்துகள் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கான் 9 ராக்கெட்டில் பூமியின் வெளிவட்ட பாதைக்கு சென்று மீண்டும் பூமியை அடைந்திருக்கின்றன. இந்த பந்துகள் ஃபமாத் விமான நிலையத்தில் வைத்து உலகக்கோப்பை அதிகாரிகளிடத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
அடிடாஸ் தயாரித்த உலகக் கோப்பை தொடருக்கான இந்த பந்துகள், சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த பசைகள் மற்றும் மைகளை கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கிறது. அவை "அல் ரிஹ்லா" என்று அழைக்கப்படுகின்றன. அதாவது அரபு மொழியில் "பயணம்" அல்லது "உல்லாசப் பயணம்" என அதற்கு அர்த்தம் ஆகும். அதன் அர்த்தப்படியே ஒரு நீண்ட பயணத்தை மேற்கொண்டு பூமிக்கு திரும்பி இருக்கின்றன இந்த பந்துகள். இந்த பந்துகளில் சென்சார்கள் பொருத்தப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
