‘கோலி கல்யாணம் பண்ணியிருக்க கூடாது’.. என்ன இப்படி சொல்லிட்டாரு..! பரபரப்பை கிளப்பிய பாகிஸ்தான் வீரர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவிராட் கோலிக்கு திருமணம் நடந்ததால்தான் அவரின் கிரிக்கெட் வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் வீரர் சோயப் அக்தர் பரபரப்பை கிளப்பியுள்ளார்.
கடந்த ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பை தொடருடன் இந்திய டி20 அணிக்கான கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகினார். இதனை அடுத்து திடீரென ஒருநாள் கிரிக்கெட் அணிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்தும் விராட் கோலி நீக்கப்பட்டார். இந்த சூழலில் சமீபத்தில் நடந்து முடிந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருடன், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகினார்.
கேப்டன் பதவிகளில் இருந்து விடுபட்ட பின்னர் விராட் கோலி மீண்டும் தனது பழைய பேட்டிங் ஃபார்முக்கு திரும்புவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். அதற்கு காரணம், கடந்த 2019-ம் ஆண்டுக்கு சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு சதத்தை கூட அவர் அடிக்கவில்லை. தென் ஆப்பிரிக்க தொடரிலும் அரைசதங்கள் மட்டுமே எடுத்தார்.
இந்த நிலையில் விராட் கோலியின் தடுமாற்றத்துக்கு அவரின் திருமண வாழ்கையே காரணம் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ‘விராட் கோலியின் கேப்டன்சியில் எனக்கு பெரிய உடன்பாடு இல்லை. பேட்டிங்கில் அவர் தொடர்ந்து 100, 200 என அடித்து சாதிக்க வேண்டியவர். ஆனால் திருமணம் அதை பாதித்து விட்டது.
கோலியின் இடத்தில் நான் இருந்திருந்தால் திருமணம் செய்திருக்க மாட்டேன். கிரிக்கெட்டை மகிழ்ச்சியாக விளையாடி ரன்களை குவித்திருப்பேன். குடும்பம், குழந்தைகள் மூலமாக வீரர்களுக்கு அதிக அழுத்தங்கள் வரும், பொறுப்புகள் அதிகரிக்கும். இதனால் முன்னணி வீரர்களின் கிரிகெட் பயணம் குறுகிய நாட்களுக்குள் முடிவடைந்துவிடும்.
கிரிக்கெட் வீரருக்கு முதல் 10-12 வருடம் மிகவும் முக்கியமானது. அதை இழந்தால் மீண்டும் வராது. அந்த நாட்கள் விராட் கோலிக்கு முடிந்து விட்டது என நினைக்கிறேன். அதனால்தான் தற்போது தடுமாறி வருகிறார். கிரிக்கெட்டில் முடிந்தவரை சாதித்துவிட்டு அவர் திருமணம் செய்திருக்க வேண்டும். அதற்காக நான் ஒன்றும் திருமணத்துக்கு எதிரானவன் அல்ல. ஒரு அணியின் தலைவர், தனது கடமையை முடித்த பிறகு திருமணம் செய்துக்கொண்டால் நல்லது. நானும் கேப்டன் பதவியில் இருந்து விலகிய பின்புதான் திருமணம் செய்துக்கொண்டேன்’ என சோயிப் அக்தர் கூறியுள்ளார்.
சோயப் அக்தரின் கருத்து சர்ச்சையான நிலையில், ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். விராட் கோலி, பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவை கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.