‘வெங்காயம், தக்காளி எல்லாம் விற்கலாம், வாங்கலாம்’... ‘ஆனால் கிரிக்கெட் மட்டும்?’... 'முன்னாள் நட்சத்திர வீரர் ஆதங்கம்’!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபாகிஸ்தான் - இந்தியா இடையே கிரிக்கெட் போட்டி மீண்டும் தொடங்க வேண்டும் என்று தனது ஆதங்கத்தை முன்னாள் பாகிஸ்தான் வீரர் தெரிவித்துள்ளார்.

ராவல் பிண்டி எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் தனது யூடியூப் சேனலில் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, இந்தியாவும், பாகிஸ்தானும் டேவிஸ் கோப்பைப் போட்டியில் விளையாடுகின்றன. கபடி விளையாட்டில் இரு அணிகளும் பங்கேற்கின்றன, ஆனால், கிரிக்கெட் போட்டி மட்டும் ஏன் இந்தியா, பாகிஸ்தான் விளையாடுவதில்லை.
இருநாடுகளில் இருந்து ஏற்றுமதி, இறக்குமதியாகும் வெங்காயம், தக்காளி ஆகியவற்றை இரு நாட்டு மக்களும் சாப்பிடுகின்றனர். ஆனால், கிரிக்கெட் போட்டிகளை மட்டும் ஏன் நடத்துவதில்லை?. இந்தியா, பாகிஸ்தானுக்குச் செல்ல முடியாது, பாகிஸ்தான் இந்தியாவுக்குச் செல்ல முடியாது என்பதை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால், ஆசியக் கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை போன்ற போட்டிகள் நடுநிலையான இடங்களில் நடக்கும் போது விளையாடுகிறோம்.
உலகிலேயே மிகச் சிறந்த விருந்தோம்பல் கொண்ட நாடுகளாக இரு நாடுகளும் இருக்கின்றன. அப்படி இருக்கும் போது இந்தியா முதலில் முன் வர வேண்டும். இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் கிரிக்கெட் விளையாட முடியாவிட்டால் அனைத்து உறவுகளும் துண்டிக்கப்பட வேண்டும். நீங்கள் உறவுகளை துண்டிக்க விரும்பினால் வர்த்தகத்தை நிறுத்துங்கள். கபடி விளையாடுவதை நிறுத்துங்கள். ஏன் கிரிக்கெட் மட்டும்?. அது கிரிக்கெட்டாக இருக்கும் போதெல்லாம் நாம் அதை அரசியல் ஆக்குகிறோம். இது மிகவும் ஏமாற்றமளிக்கிறது’ என்று கூறியுள்ளார்.
