'"சிஎஸ்கே'வ விட்டு போனதுக்கு அப்புறமும்.. 'டீம்' மேல எவ்ளோ 'அக்கறை' பாருங்க.." 'வாட்சன்' செயலால் நெகிழ்ந்த 'சென்னை' ரசிகர்கள்!.. 'வைரல்' சம்பவம்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் அணிகளில் பலம் வாய்ந்த அணியாக திகழ்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடந்த சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கு கூட முன்னேறாமல், புள்ளிப் பட்டியலில் 7 ஆவது இடம் பிடித்து, லீக் சுற்றுடன் முதல் முறையாக வெளியேறி அதிர்ச்சி அளித்திருந்தது.
இதன் காரணமாக, தோனியின் கேப்டன்சி மீதும், சீனியர் வீரர்களின் ஆட்டம் மீதும் கடுமையான விமர்சனம் வைக்கப்பட்டது. அதே போல, இந்த சீசனிலும், மற்ற அணிகளுடன் ஒப்பிடும் போது, சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது கடினம் தான் என கிரிக்கெட் நிபுணர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் பலர் தெரிவித்து வருகின்றனர்.
ஆனாலும், சென்னை அணி மற்றும் அதன் ரசிகர்கள், இந்த முறை நிச்சயம் பழைய ஃபார்முடன் வந்து அசத்தும் என நம்பிக்கையுடன் உள்ளனர். இதற்கு சான்றாக, கடந்த சீசனில் தனிப்பட்ட காரணங்களால் விலகியிருந்த சுரேஷ் ரெய்னா, இந்த முறை மீண்டும் அணியில் இணைந்து, டெல்லி அணிக்கு எதிரான இன்றைய போட்டியில், அரை சதமடித்து அசத்தினார்.
இந்நிலையில், சிஎஸ்கே அணிக்காக ஆடியிருந்த ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் (Shane Watson), தனது இன்ஸ்டாவில் சென்னை அணிக்கு ஸ்பெஷல் வாழ்த்து ஒன்றைத் தெரிவித்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னை அணி, ஐபிஎல் கோப்பையை வெல்ல மிக முக்கிய காரணமாக இருந்த வாட்சன், 2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியிலும், ரத்தம் சிந்த சிந்த வெற்றிக்காக போராடியிருந்தார்.
இதனையடுத்து, கடந்த சீசனில் கடைசியாக ஆடிய வாட்சன், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்தும் ஓய்வு பெறுவதாக கடந்த ஆண்டு அறிவித்திருந்தார்.
இந்நிலையில், சென்னை அணியின் கேப்டன் தோனி உள்ளிட்ட வீரர்கள் சிலருடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த வாட்சன், 'சிஎஸ்கேவின் முதல் போட்டிக்கு வாழ்த்துக்கள். இந்த சீசனில் நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றுங்கள்' என சென்னை அணிக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில், தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.
தான் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகிய பின்னரும், ஒரு குடும்பம் போல கருதி, இணைந்து ஆடிய சிஎஸ்கே அணிக்காக இந்த சீசனில் வாழ்த்துக்களை வாட்சன் தெரிவித்துள்ளது, சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.