ஓகே சொன்ன கங்குலி.. நோ சொன்ன டிராவிட்.. சீனியர் வீரர் கருத்தால் சர்ச்சை.. மௌனம் கலைத்த டிராவிட்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி 20 தொடரை, இந்திய அணி கைப்பற்றி அசத்தியுள்ளது.
இரண்டு தொடரிலும், வெஸ்ட் இண்டீஸ் அணி வொயிட் வாஷ் செய்யப்பட்டிருந்த நிலையில், ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி, பல சாதனைகளையும் படைத்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக, இலங்கை அணிக்கு எதிராக, டி 20 தொடர் மற்றும் டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் மோதவுள்ளது.
விரித்திமான் சஹா
இந்த தொடர்களுக்கான இந்திய அணி, கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டிருந்தது. சமீப காலமாக டெஸ்ட் தொடர்களில், பெரிய அளவில் ஃபார்மில் இல்லாத பேட்ஸ்மேன்கள், புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர், இந்திய அணியில் இடம்பிடிக்கவில்லை. இவை அனைத்தையும் விட, இந்திய அணியின் சீனியர் விக்கெட் கீப்பர் விரித்திமான் சஹாவின் பெயர், 18 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலில் சேர்க்கப்படவில்லை.
காரணம் என்ன?
விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டுடன், பேக்கப் கீப்பராக சஹா பெயர் இடம்பெறும். ஆனால், இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், சஹாவுக்கு பதிலாக கேஎஸ் பரத் சேர்க்கப்பட்டுள்ளார். இது பற்றி, இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர், சஹா இடம்பெறாமல் போனதன் காரணத்தை வெளியிட முடியாது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அதிகம் தன்னம்பிக்கை
இந்திய அணியின் தேர்வாகாமல் போனது பற்றி பேசியிருந்த சஹா, 'கடந்த ஆண்டு, நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், நான் 61 ரன்கள் எடுத்த போது, என்னை அழைத்து பாராட்டிய பிசிசிஐ தலைவர் கங்குலி, "நான் பிசிசிஐயில் இருக்கும் வரை, நீயும் இந்திய அணியில் இருப்பாய்" என குறிப்பிட்டிருந்தார். பிசிசிஐ தலைவரின் வார்த்தை, எனக்கு அதிகம் தன்னம்பிக்கையை ஏற்படுத்தியது.
ஓய்வு முடிவு?
ஆனால், அதற்குள் அனைத்தும் மாறி விட்டது. இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூட, ஓய்வு பெறுவது குறித்து ஆலோசிக்குமாறு என்னிடம் கேட்டுக் கொண்டார்' என சஹா தெரிவித்திருந்தார். கங்குலி மற்றும் டிராவிட் தன்னிடம் தெரிவித்தது பற்றி சஹா பகிர்ந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில், சீனியர் வீரரின் கருத்து அதிகம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, சஹாவின் கருத்து பற்றி, ராகுல் டிராவிட் தற்போது மனம் திறந்துள்ளார்.
மரியாதை உண்டு
'சஹாவின் கருத்தால் நான் காயமடையவில்லை. அவரின் சாதனைகள் மற்றும் பங்களிப்பின் மீது, எனக்கு அதிக மரியாதை உண்டு. அதில் இருந்து தான், அவருடனான என்னுடைய உரையாடல் தொடங்கியது. அவரின் எதிர்காலம் பற்றி, ஊடகம் மூலம் அவர் தெரிந்து கொள்ள வேண்டும் என நான் விரும்பவில்லை. சில நேரம், வீரர்களுடன் நாம் கடினமான உரையாடல்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். அதற்காக வேண்டி, பேசாமல் மூடி மறைத்துக் கொள்வது என்பது சரியான ஒன்றல்ல.
இப்போதும், ஆடும் லெவனை நாங்கள் தேர்வு செய்யும் போது, அணியில் தேர்வாகாத வீரர்களிடம் அவர்கள் ஏன் தேர்வாகவில்லை என்பதற்கான காரணத்தினை அவர்களிடமே எடுத்துரைக்கிறோம். இதன் காரணமாக, வீரர்கள் மனம் வருந்துவது இயற்கையான ஒன்று. எனது அணியினர் அனைத்து விஷயங்களையும், நேர்மையுடனும், தெளிவுடனும் புரிந்து கொள்ள தகுதி உடையவர்கள்.
ரிஷப் பண்ட்
இந்த ஆண்டு மிக குறைந்த எண்ணிக்கையிலான டெஸ்ட் போட்டிகள் இருக்கும் நிலையில், ரிஷப் பண்ட் தன்னை நம்பர் 1 விக்கெட் கீப்பராக நிலை நிறுத்திக் கொண்டார். இதனால், மேலும் ஒரு இளம் விக்கெட் கீப்பரை நாங்கள் தயார் செய்ய பார்க்கிறோம். இந்த முடிவினால், சஹாவின் பங்களிப்பு மீதான எனது உணர்வினையோ, மரியாதையையோ மாற்றி விட முடியாது.
இப்படிப்பட்ட உரையாடல்களை அணி வீரர்களுடன் மறைத்து வைக்கவும் என்னால் முடியாது. சில நேரங்களில், நான் கூறும் கருத்தினை வீரர்கள் மதிப்பார்கள் என்ற நம்பிக்கையில், வீரர்களிடம் அனைத்தையும் பேசுகிறேன்' என ராகுல் டிராவிட் விளக்கமளித்துள்ளார்.
"செம சேட்டை புடிச்ச ஆளுப்பா இந்த ரோஹித்.." ஒரே நொடியில் எடுத்த முடிவு.. மெர்சல் சம்பவம்