"என் இடத்த சூர்யகுமார் பறிச்சுக்கிட்டாரா?".. பரபரப்பை கிளப்பிய விவாதம்.. இளம் வீரரின் பதில் என்ன?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியாவில் பல உள்ளூர் தொடர்கள் நடைபெற்று வரும் நிலையில், இதில் சிறப்பாக ஆடும் பல இளைஞர்கள் சர்வதேச அணியில் விளையாடும் வாய்ப்பையும் பெறுவார்கள்.

அதிலும் குறிப்பாக ஒரு தொடரை சொல்ல வேண்டும் என்றால் நிச்சயம் ரஞ்சி கிரிக்கெட் தொடரை சொல்லிவிடலாம். பல மாநிலங்கள் மத்தியில் நடைபெறும் ரஞ்சி கிரிக்கெட் தொடரில் சிறப்பாக ஆடி பட்டையை கிளப்பும் வீரர்கள், சர்வதேச அணிக்கு விளையாடுவதற்கான வாய்ப்புகளையும் பெறுவார்கள். அந்த வகையில் இந்திய அணி கண்ட ஏராளமான நட்சத்திர வீரர்கள் ரஞ்சி கோப்பைத் தொடர் மூலம் தங்களது திறனை நிரூபித்து அணியில் இடம் பிடித்து சிறந்த வீரர்களாக வலம் வந்தவர்கள் தான்.
இதற்கு மத்தியில் இளம் வீரர் சர்ஃப்ராஸ் கானுக்கு இந்திய அணியில் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதை பற்றி கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் குறிப்பிட்டும் வருகின்றனர். இதற்கு காரணம், மும்பை அணிக்காக ரஞ்சி தொடரில் ஆடி வரும் சர்ஃப்ராஸ் கான், கடந்த பல சீசன்களாகவே ஆதிக்கம் செலுத்தி வருகிறார். தொடர்ந்து 100 -க்கும் மேல் சராசரி வைத்து சிறப்பாக ஆடி பலரது கவனம் ஈர்த்து வரும் சர்பராஸ்கான், தலைசிறந்த இளம் வீரராக வலம் வந்த போதும் இந்திய அணியில் அவர் இடம்பெறாதது ஏராளமான கேள்விகளை சமீபத்தில் எழுப்பி இருந்தது.
இதனிடையே தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அடுத்து மோத உள்ள டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டியில் சர்ஃபராஸ் கானுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த தொடரில் அவருக்கு இடம் கிடைக்காமல் போனது. மேலும் சூர்யகுமார் யாதவிற்கும் இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது.
இதனால், சர்ஃபராஸ் கானுக்கு கிடைக்க வேண்டிய இடம் தான் சூர்யகுமார் யாதவிற்கு கிடைத்தது என்றும் ஒரு விமர்சனம் எழுந்தது. இந்த நிலையில், இது பற்றி தற்போது சர்ஃபராஸ் கான் தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.
விமல் குமார் என்ற பத்திரிகையாளர் கேள்விக்கு பதிலளித்த சர்ஃபராஸ் கான், சூர்யகுமார் வாய்ப்பு பற்றி பேசுகையில், "தன்னுடன் விளையாடி ய சூர்யகுமார் இந்தியாவுக்காக தேர்வு செய்யப்பட்டதில் எனக்கு மகிழ்ச்சிதான். சூர்யகுமார் என்னுடைய நல்ல நண்பர். மும்பை அணிக்காக விளையாடும்போது நாங்கள் நிறைய நல்ல நேரங்களை செலவிட்டுள்ளோம். அந்த நேரத்தில் நான் அவரிடம் நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். அவர் தனது வாய்ப்புக்காக நீண்ட நாள் காத்திருந்துள்ளார்.
அவர் தற்போது ரஞ்சிக்கோப்பை மற்றும் டி20 கிரிக்கெட் விளையாடியது அவருக்கு அணியில் வாய்ப்பை பெற்றுக் கொடுத்துள்ளது. அதேபோல, நானும் அனைத்து வகையான போட்டியிலும் சிறப்பாக ஆடி அணியில் இடம் பிடிப்பேன். அதிலிருந்து யாரும் என்னைத் தடுக்க முடியாது" என கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
