VIDEO: தலைவா அவர் பவுலிங் போட ‘ஓடி’ வந்துட்டு இருக்காரு.. நீங்க இந்த பக்கம் ‘திரும்பி’ என்ன பண்ணிட்டு இருக்கீங்க.. ரிஷப் பந்தால் ஏற்பட்ட கலகலப்பு..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்த் செய்த செயலால் ரசிகர்களிடையே கலகலப்பு ஏற்பட்டது.
இங்கிலாந்தின் லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 78 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. ஆனால் இங்கிலாந்து அணி 432 ரன்களை குவித்தது. இதனால் இந்திய அணியை விட 354 ரன்கள் அந்த அணி முன்னிலை பெற்றது.
இதனை அடுத்து இந்தியா தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடியது. இதில் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா 59 ரன்களும், புஜாரா 91 ரன்களும், கேப்டன் விராட் கோலி 55 ரன்களும் எடுத்தனர். ஆனால் அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து ஆடவில்லை. அதில் ஜடேஜா மட்டுமே 30 ரன்கள் எடுத்தார், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதனால் 278 ரன்களுக்கு இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன்மூலம் 76 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளிலும் சமனில் உள்ளன. இதில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ராபின்சனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்த நிலையில் இப்போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் செய்த செயல் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. அதில், விராட் கோலி அவுட்டானதும் 6-வது வீரராக ரிஷப் பந்த் களமிறங்கினார். பேட்டிங் ஸ்ட்ரைக்கில் ரஹானே நிற்க, நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் ரிஷப் பந்த் நின்று கொண்டிருந்தார்.
அப்போது இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்து வீச ஓடி வந்தார். ஆனால் இதைக் கவனிக்காத ரிஷப் பந்த், ரஹானேவுக்கு எதிர் திசையில் நின்று தனது நிழலைப் பார்த்து பேட்டிங் பயிற்சி மேற்கொண்டார். இதனை அடுத்து ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓடி வருவதைப் பார்த்ததும், சட்டென ரிஷப் பந்த் திரும்பிவிட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Pant non-striker shadow batting #ENGvIND pic.twitter.com/hYGoBKg3zh
— Cat Jones (@Cricketbatcat) August 28, 2021
அதேவேளையில் ரசிகர்கள் ரிஷப் பந்தை விமர்சனமும் செய்து வருகின்றனர். அதற்கு காரணம், இந்த தொடரில் இந்திய அணி இக்கட்டான நிலையில் இருந்தபோது அவர் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தவில்லை. இதுவரை நடந்த 3 டெஸ்ட் போட்டிகளில் ரிஷப் பந்த் எடுத்த ரன்கள் 25, 37, 22, 2, 1 என்பது குறிப்பிடத்தக்கது.