‘அந்த 45 நிமிஷ சொதப்பல் தான்...’ தோல்வி குறித்து விராட் கோலி வேதனை..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Jul 11, 2019 09:09 AM
அரையிறுதியில் தோல்வி அடைந்தது குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது வேதனையை தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பைத் தொடரில் நியூஸிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியைத் தழுவியது. இதனால் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இந்தியா இழந்துள்ளது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி 8 விக்கெட்டை இழந்து 239 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக ராஸ் டெய்லர் 74 ரன்களும், அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 67 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியைப் பொறுத்தவரை புவனேஷ்வர்குமார் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனை அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி ஆரம்பத்திலே 5 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. மிடில் ஆர்டரில் ஜோடி சேர்ந்த ரிஷப் பந்த் மற்றும் ஹர்திக் பாண்ட்யா நிதானமாக ஆடினர். ஆனாலும் இருவரும் 32 ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர். இதனை அடுத்து ஜோடி சேர்ந்த தோனி(50) மற்றும் ஜடேஜா(77) கூட்டணி அதிரடியாக விளையாட ஆரம்பித்தது. கடைசியாக 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது.
இந்நிலையில் தோல்வி குறித்து தெரிவித்த விராட் கோலி,‘நாங்கள் சரியாக விளையாடவில்லை என்பதை ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும். பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டதால்தான் அவர்களை குறைந்த ரன்னில் கட்டுபடுத்த முடிந்தது. அதேபோல் நியூஸிலாந்து அணி பந்துவீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால் ஒட்டுமொத்த தொடரிலும் சிறப்பாக விளையாடிவிட்டு 45 நிமிட சொதப்பலால் தொடரைவிட்டு வெளியேறுவதை நினைத்தால்தான் வேதனையாக இருக்கிறது. ரன் அவுட் என்பது தவிர்க்க முடியாத ஒன்றுதான். சில நேரங்களில் மிக சிறிய விசயங்கள் கூட ஆட்டத்தை மாற்றிவிடும். அப்படிதான் இப்போட்டியில் நடந்துவிட்டது. ஆனாலும் இந்த தொடரில் நாங்கள் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தியிருக்கிறோம்’ என அவர் தெரித்துள்ளார்.
