“10 வருசமா ஒரே தப்பதான் செஞ்சிட்டு இருக்காரு.. அவர் தலையில கோச் குட்டு வைங்க”.. சஞ்சு சாம்சனை கடுமையாக விமர்சித்த ரவி சாஸ்திரி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டு பிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 169 ரன்களை எடுத்தது.
இதனை அடுத்து பேட்டிங் செய்த பெங்களூரு அணி ஆரம்பமே தடுமாறியது. முதல் 10 ஓவர்களில் 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. அதனால் ராஜஸ்தான் அணி வெற்றி பெறும் என பலரும் கணித்தனர். ஆனால் தினேஷ் கார்த்திக், சபாஷ் அகமது ஜோடி ராஜஸ்தான் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. அதனால் 19.1 ஓவர்களில் 173 ரன்கள் எடுத்து பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங் மற்றும் கேப்டன்சி குறித்து விமர்சனம் செய்துள்ளார். அதில், ‘சஞ்சு சாம்சன் தனது ஷாட் தேர்வில் கவனம் செலுத்த வேண்டும். இந்த சீசனில் அவர் கொஞ்சம் பொறுமையாக விளையாடுகிறார் என நினைக்கிறேன். அதற்கு காரணம் அவருடைய அனுபவமாக இருக்கலாம்.
ரன்களை குவிக்க சஞ்சு சாம்சனிடம் பலவிதமான ஷாட்கள் உள்ளதுதான் பிரச்சினையே. அவர் முதல் 5 ஓவரிலேயே அனைத்து ஷாட்களையும் ஆட வேண்டும் என நினைக்கிறார். இதனால்தான் அவர் சீக்கிரமாகவே ஆட்டமிழந்து பெவிலியன் திரும்புகிறார். எந்த பவுலரிடம் எந்த ஷாட் ஆடினால் நல்லது என்று விராட் கோலிக்கு தெரியும். அந்த கலையை சஞ்ச சாம்சன் கற்க வேண்டும். சஞ்சு சாம்சன் கிரிக்கெட் விளையாட வந்து 10 ஆண்டுகள் ஆகிறது. இன்னும் ஒரே தவறையே திரும்ப திரும்ப செய்து தொடர்ந்து 20,30 ரன்களில் ஆட்டமிழந்து விடுகிறார். சஞ்சு சாம்சன் தலையில் பயிற்சியாளர் குட்டு வைக்க வேண்டும்’ என ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.