“இன்னும் அந்த ரிப்போர்ட் வரல”.. தீபக் சஹார் எப்போ வருவார்..? சிஎஸ்கே சிஇஓ புது அப்டேட்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசிஎஸ்கே அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார் எப்போது அணியில் இணைவார் என சிஇஓ காசி விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஆரம்பமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சோதனையாக அமைந்துள்ளது. கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இதனை அடுத்து நடந்த லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 210 ரன்களை எடுத்தது. இந்த இமாலய இலக்கை லக்னோ அணி அடிப்பது சிரமம் என ரசிகர்கள் பலரும் கருதினர். ஆனால் 19.3 ஓவர்களில் 211 ரன்கள் அடித்து லக்னோ அணி த்ரில் வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி விளையாடியது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 180 ரன்களை அடித்து. இதனை அடுத்து விளையாடிய சிஎஸ்கே அணி 18 ஓவர்களில் 126 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 54 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. இவ்வளவு பெரிய ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி தோல்வி அடைவது இதுவே இரண்டாவது முறை. இந்த ஹாட்ரிக் தோல்வி சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதில் சிஎஸ்கே அணியின் முக்கிய பந்து வீச்சாளராக கருதப்படும் தீபக் சஹார் காயம் காரணமாக சில மாதங்கள் ஓய்வில் இருந்தார். தற்போது அவர் வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். பவர் ப்ளே ஓவர்களில் சிறப்பாக பந்து வீசும் இவர் சிஎஸ்கே அணியில் இன்னும் இணையாமல் உள்ளது பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தீபக் சஹாரின் வருகை குறித்து தகவல் தெரிவித்துள்ளார். அதில், ‘இன்னும் என்சிஏ-விலிருந்து (National Cricket Academy) எங்களுக்கு எந்தவித ரிப்போர்ட்டும் வரவில்லை. அடுத்த வாரம் தீபக் சஹார் உடற்தகுதி குறித்த ரிப்போர்ட் வந்துவிடும் என எதிர்பார்க்கிறோம். என்சிஏ தீபக் சஹாரின் உடல் தகுதியை உறுதி செய்த பின்னரே அவரது வருகை குறித்து முடிவு செய்ய முடியும்’ என காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
