“நெறைய உள்ளூர் மேட்ச்ல பார்த்திருக்கேன்.. ருதுராஜோட வீக்னஸ் இதுதான்”.. பிரச்சனையை சுட்டிக் காட்டிய முன்னாள் வீரர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசிஎஸ்கே அணியின் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டின் வீக்னஸ் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் கடந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்ற சிஎஸ்கே அணிக்கு நடப்பு ஐபிஎல் தொடர் சோதனையாக அமைந்துள்ளது. இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் சிஎஸ்கே அணி தோல்வியை தழுவியுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் இதுபோல் முதல் 3 போட்டிகளில் சென்னை அணி தோல்வியை தழுவுவது இதுவே முதல்முறை. இது அந்த அணியின் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டு முதல் 10 அணிகள் விளையாடுவதால் கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்த சூழலில் 3 போட்டிகளில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்துள்ளதால், பிளே ஆப் சுற்றுக்கு செல்வது சிக்கலாகி உள்ளது. இனி வரும் போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் வாய்ப்பு உறுதியாகும் என சொல்லப்படுகிறது.
நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி பேட்டிங், பவுலிங், பீல்டிங் என மூன்றிலும் சொதப்பி வருகிறது. குறிப்பாக அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். விளையாடிய மூன்று போட்டிகளிலும் 0,1,1 என ஒற்றை இலக்க ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். கடந்த ஆண்டு 635 ரன்கள் அடித்து ஆரஞ்சு தொப்பியை வென்ற அவர், நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சொதப்புவது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர், ருதுராஜ் கெய்க்வாட்டின் வீக்னஸ் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘ருதுராஜ் கெய்க்வாட் பேட்டில் எட்ஜ் ஆகி அவுட்டாகி வருகிறார். உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளிலும் இதே போல் ஸ்விங்காகி வரும் பந்தில் நிறைய முறை அவுட் ஆனதை நான் பார்த்துள்ளேன். இப்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகள் மும்பை மைதானத்தில் நடைபெறுகின்றன. இந்த மைதானங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். துபாய் மைதானம் போல் அல்லாமல் பந்து நன்கு ஸ்விங் ஆகிறது. அவர் நல்ல தரமான வீரர். அதனால் ரன் குவிப்பிற்கு தேவையான முயற்சிகளை செய்தால் மட்டுமே சென்னை அணியால் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திருப்ப முடியும்’ என வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.