"எந்த கேப்டனும் இந்த ரெக்கார்டை செஞ்சதில்ல!".. ஐபிஎல் வரலாற்றில்.. தல தோனி படைத்திருக்கும் புதிய சாதனை!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐசிசி நடத்தும் 3 கோப்பைகளையும் இந்திய அணிக்குப் பெற்றுக்கொடுத்து இந்திய அணியின் கேப்டனாக தனது முத்திரையைப் பதித்த தோனி, ஐபிஎல் தொடரிலும் 2008-ம் ஆண்டு முதல் சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்று தனித்துவமான தனது கேப்டன்ஷிப்பில் பேட்ஸ்மேன்களின் பலம், பலவீனம், சூழலுக்கு ஏற்ப ப ந்துவீச்சை மாற்றுதல், பீல்டிங் செட் செய்தல், இக்கட்டானநேரத்தில் திடீர் மாற்று முடிவுகளை எடுத்து வீரர்களை சர்ப்ரைஸாக களத்தி இறக்கிவிடுவது என எல்லாவற்றையும் முகத்தில் எந்த வித பதற்றமும் இல்லாமல், கூலாக கையாண்டு வருபவர் தல தோனி.
அதேபோல் அணியை இக்கட்டான நேரத்தில் களமிறங்கி அணியை மீட்டு பல போட்டிகளில் சிறந்த ஃபினிஷராவும் தன்னை நிறுத்திக்கொண்டார். தற்போதுவரை சிஎஸ்கே அணியின் 166 போட்டிகளில் தலைமை ஏற்று அதில் 100 வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்துள்ளார் தோனி. அதாவது தோனியின் கேப்டன்ஷிப்பில் 60.24 சதவீதம் சிஎஸ்கே அணி வெற்றிகளை அடைந்துள்ளது.
தற்போது அபுதாபியில் நடந்த 13-வது சீசன் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிராக போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி பெற்ற வெற்றிதான் தோனி தலைமையில் சிஎஸ்கே பெற்ற 100-வது வெற்றியாகும். ஐபிஎல் தொடர் வரலாற்றில் இதுநாள்வரை ஒரே அணிக்கு ஒருவர் கேப்டனாக இருந்து, இப்படி 100 வெற்றிகளை எந்த கேப்டனும் பெற்றதில்லை எனும் வகையில் தோனி புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
அத்துடன் இதுவரை 11 ஐபிஎல் தொடர்களில் ஒருமுறை கூட தோனி தலைமையில் சிஎஸ்கே அணி லீக் சுற்றோடு வெளியேறியது இல்லை. 3 முறை சாம்பியன் பட்டம், 5 முறை 2-வது இடம், 2 முறை ப்ளேஆப்சுற்று என்கிற ஜோரான ரிசல்டுகளே நமக்கு கிடைக்கின்றன. 436 நாட்களாக பயிற்சியில் ஈடுபடாமல், சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் இருந்து நேரடியாக களத்துக்கு வந்து திறமான கேப்டன்ஷிப்பில் அணியை வழிநடத்த முடியும் என்றால் அது தோனியால்தான் சாத்தியம் என்பது நிரூபணமாகிறது.
நடிகர் திலகம் சிவாஜி என்றாலே ‘பாட்டுக்கு சரியாக வாயசைத்து அவரே பாடுவது போன்ற பாவனையை’ உருவாக்குவதில் வல்லவர். ஆனால் தில்லானா மோகனாம்பாள் படத்தில் வரும் எல்லா பாடல்களுமே நாயகி பத்மினிக்குதான். ஆனால் படத்தில் சிவாஜிக்கு பாடல்களே இல்லை என்பது பார்ப்பவர்களுக்கு தோன்றாத அளவுக்கு ‘நாதஸ்வரத்தை’ வாசிக்கும்போது அத்தனை பாவங்களுடன் வாசித்திருப்பார்.
அப்படித்தான் இத்தனை நாட்களுக்கு பின்னர் தல தோனியை அந்த மஞ்சள்நிற ஆடையில் பார்க்கவும், அவரின் ஹெலிகாப்டர் ஷாட்டையும் பார்க்கவும் ரசிகர்கள் இரவுவரை காத்திருந்தாலும் இறுதிவரை தோனியில் பேட்டில் பந்து படவில்லை என்று யாருக்குமே தோன்றியிருக்காது. தோனி களத்தில் இருந்ததே அவரது ரசிகர்களுக்கு ஹெலிகாப்டர் ஷாட்தான்!