"நான் சொன்னது மாதிரியே செஞ்சிட்டீங்க போல..." 'இந்திய' அணியை மீண்டும் 'கிண்டல்' செய்த 'வாகன்'... பரபரப்பை ஏற்படுத்திய 'ட்வீட்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வரும் டி 20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்திருந்த நிலையில், நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில், ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் வீரர்களான சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் களமிறங்கினர். முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி, 18 ஆவது ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது.
அதிகபட்சமாக, கேப்டன் விராட் கோலி 73 ரன்களும், இஷான் கிஷான் 56 ரன்களும் எடுத்தனர். தனது அறிமுக போட்டியிலேயே எந்தவித பதட்டமும் இன்றி ஆடிய இளம் வீரர் இஷான் கிஷானுக்கு, முன்னாள் வீரர்கள் பலர் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் மீண்டும் இந்திய அணியை விமர்சனம் செய்து சில ட்வீட்களை செய்துள்ளார். முன்னதாக, முதல் போட்டியில், இந்திய அணி தோல்வியடைந்த போது, இந்திய கிரிக்கெட் அணியை விட, ஐபிஎல் தொடரில் ஆடி வரும் மும்பை இந்தியன்ஸ் சிறந்த அணி என விமர்சனம் செய்திருந்தார்.
The @mipaltan are a better T20 team than @BCCI !!! #JustSaying #INDvENG
— Michael Vaughan (@MichaelVaughan) March 12, 2021
இதனையடுத்து, இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதும், 'இந்திய அணி எனது அறிவுரையின் படி, மும்பை இந்தியன்ஸ் வீரர்களை அணியில் இணைத்து வெற்றி கண்டுள்ளது. மிகவும் அற்புதமான நடவடிக்கை' என கிண்டல் செய்து ட்வீட் செய்துள்ளார்.
I see @BCCI have taken the advice & got more @mipaltan players involved ... Very smart move ... #INDvsENG
— Michael Vaughan (@MichaelVaughan) March 14, 2021
அதே போல, தனது இன்னொரு ட்வீட்டில், 'நான் ஏற்கனவே சொன்னதை போல இந்திய அணியை விட மும்பை இந்தியன்ஸ் அணி சிறந்தது தான்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Told you all the @mipaltan were better than India ... What a debut @ishankishan51 !! #INDvsENG
— Michael Vaughan (@MichaelVaughan) March 14, 2021
ஏற்கனவே, டெஸ்ட் தொடரின் போது பிட்ச் தரமற்றது என தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார். தற்போது டி 20 தொடரில், இந்திய அணி தோல்வியடைந்த போதும், வெற்றி பெற்ற போதும், விமர்சனத்தையும், கிண்டலையும் முன் வைப்பது போன்ற ட்வீட்களை வாகன் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.