மீண்டு வந்த மயங்க் அகர்வால்... 2 ஆண்டுகளுக்குப் பின்னர் நிகழ்ந்த சாதனை..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா- நியூசிலாந்து மோதும் 2-வது டெஸ்ட் போட்டியில் மயங்க் அகர்வால் 2 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு புது சாதனையை நிகழ்த்தி உள்ளார்.
இந்தியா- நியூசிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டித் தொடர் நடந்து வருகிறது. இதன் முதல் போட்டி கான்பூரில் கேப்டன் அஜிங்கியா ரஹானே தலைமையில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் இந்தியா- நியூசிலாந்து இடையே போட்டி ‘ட்ரா’ ஆனது. 2-வது போட்டி மும்பையில் கேப்டன் விராட் கோலி தலைமையில் நடைபெற்றது.
கடந்த 2019-ம் ஆண்டுக்குப் பின்னர் தனது சதம் அடிக்கும் பயணத்தை மீண்டும் தொடங்கி உள்ளார் மயங்க் அகர்வால். இது டெஸ்ட் போட்டிகளில் அகர்வாலின் 4-வது சதம் ஆகும். இந்த டெஸ்ட் போட்டியின் மூலம் தொடக்க ஆட்டக்காரர் ஆக மயங்க் அகர்வால் அடித்த சதம் அவருக்கு ஒரு கம்-பேக் ஆக அமைந்துள்ளது என ரசிகர்களால் பாராட்டப்படுகிறார்.
இன்றைய போட்டியில் 196 பந்துகளில் 100 ரன்களை அடித்து சாதனை படைத்துள்ளார் மயங்க் அகர்வால். இரவு முழுவதும் மழை பெய்ததால் மைதானம் மிகவும் ஈரத்தன்மை உடன் காணப்பட்டது. டாஸ் வென்றது இந்திய அணி. கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்கள் ஆக மயங்க் மற்றும் சுப்மன் ஆட்டத்தை சிறப்பாகவே தொடங்கினர்.
சுவாரஸ்யமாக, மயங்க் அகர்வால் அடித்த 4 சதங்களும் இந்திய மண்ணில் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஓராண்டாக மயங்க் அகர்வால் தொடர்ச்சியாக சர்வதேச போட்டிகளில் மோசமான விளையாட்டுத் திறனை வெளிப்படுத்தி வந்துள்ளார் எனக் குற்றம் சாட்டப்பட்டார். தற்போது டெஸ்ட் போட்டியின் மூலம் மீண்டும் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தத் தொடங்கி உள்ளார் அகர்வால்.