‘அந்த ஒரு போட்டோவ 4 வருஷமா வச்சிருந்தேன்… இந்த நாளுக்காகத் தான் காத்துருந்தேன்'- உருகும் இளம் வீரரின் தந்தை
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஷ்ரேயாஸ் ஐயர் இன்று முதல் முறையாக இந்திய டெஸ்ட் அணியின் சார்பில் களத்தில் அறிமுகம் ஆகியுள்ளார். முதல் போட்டியிலேயே ஜடேஜா உடனான கூட்டணியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெற்று வருகிறார் ஷ்ரேயாஸ்.
ஷ்ரேயாஸ்-ன் டெஸ்ட் அறிமுகத்தில் அவரை விட அவரது தந்தை மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளாகத் தனது மகனின் ஒரே ஒரு புகைப்படத்தை மாற்றாமல் வாட்ஸ்அப் டிபி ஆக வைத்திருந்துள்ளார். இதற்கான காரணத்தையும் இன்று ஷ்ரேயாஸ் தந்தை வெளிப்படுத்தி உள்ளார்.
4 ஆண்டுகளாக ஒரே டிபி ஆக வைத்திருக்கும் அளவுக்கு அது என்ன புகைப்படம் என யோசிக்கிறீர்களா? 4 ஆண்டுகளுக்கு முன்னர் வெள்ளை நிற கிரிக்கெட் உடையில் பார்டர் கவாஸ்கர் கோப்பையைக் கையில் ஏந்தியபடி ஷ்ரேயாஸ் நிற்கும் காட்சி தான் அவரது தந்தையில் நீண்ட நாள் டிபி. 26 வயதான ஷ்ரேயஸ் ஐயரின் தந்தை சந்தோஷ் ஐயருக்கு தனது மகன் டெஸ்ட் போட்டிகளை ஆட வேண்டும் என்பது தான் நீண்ட நாள் கனவாம்.
இதுகுறித்து ஷ்ரேயாஸ் ஐயர் தந்தை கூறுகையில், “தர்மசாலாவில் 4 ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடிய போது விராட் கோலிக்குப் பதிலாக அங்கு நின்றிருந்த ஷ்ரேயாஸிடம் சக அணி வீரர்கள் பார்டர் கவாஸ்கர் கோப்பையைக் கையில் கொடுத்துள்ளார்கள். சும்மா பிடித்திருக்கும்படி கூறிய அந்த புகைப்படம் தான் என் வாழ்நாளில் நான் பொக்கிஷமாகக் கருதிய புகைப்படம்.
அப்போது அவன் இந்திய அணிக்காக நிச்சயம் விளையாட வேண்டும் என விரும்பினேன். அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும் போது இந்திய டெஸ்ட் அணியில் ஷ்ரேயாஸ் விளையாட வேண்டும் என ஆசை. இந்திய அணியில் ஷ்ரேயாஸ் இடம் பிடித்திருந்தாலும் அவன் எப்போது டெஸ்ட் விளையாடுவான் எனக் காத்துக் கொண்டு இருந்தேன். ஐபிஎல் உட்பட இதர ரக போட்டிகளில் ஷ்ரேயாஸ் விளையாடிய போது கிடைக்காத சந்தோஷம் அவன் டெஸ்ட் விளையாடப் போகிறான் என்ற அறிவிப்பை ரஹானே செய்த போது கிடைத்தது” எனக் கூறியுள்ளார்.