MENTOR ரோலுக்கு கௌதம் கம்பீர் ஏன்..? அவருடைய வேலை என்ன..? லக்னோ உரிமையாளர் அதிரடி கருத்து..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகௌதம் கம்பீரை ஆலோசகராக நியமிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து அந்த அணியின் உரிமையாளர் பகிர்ந்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் அடுத்த ஆண்டு முதல் அகமதாபாத், லக்னோ ஆகிய இரு புதிய அணிகள் இணைய உள்ளன. அதனால் அனைத்து அணியில் உள்ள வீரர்களும் கலைக்கப்பட்டு மெகா ஐபிஎல் ஏலம் நடைபெற உள்ளது.
அதற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் ஏற்கனவே விளையாடிய 4 வீரர்களை தக்க வைத்துக்கொள்ள பிசிசிஐ அனுமதி வழங்கியது. அதன்படி சமீபத்தில் அனைத்து அணிகளும் தாங்கள் தக்க வைத்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டன.
இந்த நிலையில் லக்னோ அணிக்கு ஆலோசகராக இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். அதனால் அந்த அணியின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த சூழலில் கௌதம் கம்பீர ஆலோசகராக நியமிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா பகிர்ந்துள்ளார்.
அதில், ‘கௌதம் கம்பீர் எங்கள் அணியின் வீரர்களை உத்வேகப்படுத்தும் பணியை மேற்கொள்வார். நீண்ட காலத்திற்கு விளையாடும் அணியாக மாற்றும் வேலையை அவர் செய்ய உள்ளார். இவர் தலைமையில் விளையாடிய பல இளம் வீரர்கள் தற்போது கொல்கத்தா அணிக்காக விளையாடி வருகின்றனர். தற்போது லக்னோ அணிக்காவும் இளம் வீரர்களை கண்டெடுத்து விளையாட வைக்க உள்ளார். அதற்கான வேலைகளில் அவர் தீவிரம் காட்டி வருகிறார்’ என கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் முன்னதாக கொல்கத்தா அணிக்கு கேப்டனாக கௌதம் கம்பீர் விளையாடி இருந்தார். இவர் தலைமையிலான கொல்கத்தா அணி இரண்டு (2012, 2014) முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.