என்னங்க சொல்றீங்க உண்மையாவா..? இவரும் ‘விலக’ போறாரா..? SRH அணியை விரட்டும் சோதனை..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐபிஎல் தொடரின் 14-வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த தொடர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்குதான் மோசமானதாக அமைந்துவிட்டது. மொத்தம் 14 போட்டிகளில் விளையாடிய ஹைதராபாத் அணி 3-ல் மட்டுமே வெற்றி பெற்றது.
இதன் காரணமாக இந்தத் தொடரின் பாதியிலேயே டேவிட் வார்னர் கேப்டன் பதவியிலிருந்து விலக்கப்பட்டார். இதனை அடுத்து கேன் வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனாலும் ஹைதராபாத் அணி தொடர் தோல்விகளை சந்தித்து வந்தது.
இந்த நிலையில் அடுத்த ஆண்டு அகமதாபாத், லக்னோ என்ற 2 புதிய அணிகள் இணைய உள்ளன. அதனால் அனைத்து அணியில் உள்ள வீரர்களும் கலைக்கப்பட்டு மெகா ஐபிஎல் ஏலம் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் விளையாடிய 4 வீரர்களை தக்கவைத்துக்கொள்ள பிசிசிஐ அனுமதி வழங்கியது. அதன்படி நேற்று முன்தினம் அனைத்து அணிகளும் தாங்கள் தக்க வைத்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டன.
இதில் ஹைதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன், உம்ரான் மாலிக், அப்துல் சமத் ஆகிய 3 வீரரக்ளை மட்டுமே தக்கவைத்தது. அந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரராக கருதப்படும் ரஷித் கான் தக்க வைக்கப்படாதது ஹைதராபாத் ரசிகர்களை அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளர் ட்ரெவர் பேலிஸ் (Trevor Bayliss) தனது பொறுப்பில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் புதிதாக இணைக்கப்பட்டுள்ள லக்னோ அணிக்கு பயிற்சியாளராக செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே டேவிட் வார்னர், ரஷித் கான் போன்ற முன்னணி வீரர்கள் இல்லாத நிலையில், தற்போது அதன் பயிற்சியாளரும் விலக உள்ளதாக தகவல் வெளியானது ஹைதராபாத் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
