கே.எல்.ராகுலை தொடர்ந்து விலகும் ‘மற்றொரு’ பிரபலம்..? பஞ்சாப் அணியை தொடரும் சோதனை..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபஞ்சாப் கிங்ஸ் அணியில் கே.எல்.ராகுலைத் தொடர்ந்து மற்றொரு பிரபலமும் விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடரில் அடுத்த ஆண்டு முதல் அகமதாபாத், லக்னோ என்ற 2 புதிய அணிகள் இணைய உள்ளன. அதனால் அனைத்து அணியில் உள்ள வீரர்களும் கலைக்கப்பட்டு புதிதாக ஏலம் நடைபெற உள்ளது.
அதற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் விளையாடிய 4 வீரர்களை தக்க வைத்துக்கொள்ள பிசிசிஐ அனுமதி வழங்கியது. அதன்படி நேற்று முன்தினம் அனைத்து அணிகளும் தாங்கள் தக்க வைத்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டன. இதில் பஞ்சாப் கிங்ஸ் அணியை பொறுத்தவரை மயங்க் அகர்வால் மற்றும் அர்ஸ்தீப் சிங் ஆகிய 2 வீரர்களை மட்டுமே தக்க வைத்தது. அந்த அணியின் கேப்டனான கே.எல்.ராகுல் தக்க வைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் ஏலத்திற்கு விடப்பட்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து விளக்கமளித்த பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே, ‘பஞ்சாப் அணி, கே.எல்.ராகுலை தக்க வைத்து அவர் தலைமையிலேயே அணியை தொடர வேண்டும் என்று விரும்பியது. ஆனால் கே.எல்.ராகுல்தான் தன்னை தக்க வைக்க வேண்டாம் என்று கூறி, ஏலத்தில் கலந்துகொள்ள உள்ளதாக கூறினார்’ என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் பஞ்சாப் அணியின் துணை பயிற்சியாளர் ஆன்டி பிளவர் விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய 2 புதிய அணிகள் இணைய உள்ளன. இந்த அணிகளும் புதிய பயிற்சியாளர்களுக்கான தேடலில் ஈடுபட்டு வருகிறது. இந்த இரு அணிகளில் ஏதேனும் ஒன்றில் ஆன்டி பிளவர் பயிற்சியாளராக விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதனால் பஞ்சாப் அணியின் துணைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து அவர் விலக உள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் விலகியுள்ள நிலையில், தற்போது அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர் ஆன்டி பிளவரும் விலக உள்ளது பஞ்சாப் அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.