அவ்ளோதான் இனி ஒன்னும் பண்ண முடியாது.. தொடர்ந்து 2-வது ஆண்டாக ‘ஏமாற்றிய’ கோலி.. ரசிகர்கள் அதிருப்தி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் விராட் கோலி தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சதம் அடிக்காமல் ஏமாற்றம் அளித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் செஞ்சூரியன் மைதானத்தில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 327 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 174 ரன்களும் எடுத்தது.
அதேபோல் தென்னாபிரிக்க அணி தங்களது முதல் இன்னிங்ஸில் 197 ரன்கள் எடுத்தது. அதனால் 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் செய்து வருகிறது.
இப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் இன்னிங்சில் 35 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 18 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார். இனி இரண்டாவது டெஸ்ட் போட்டி அடுத்த ஆண்டு (2022) ஜனவரி 3-ம் தேதிதான் நடைபெற உள்ளது. அதனால் இந்த ஆண்டு ஒரு சதம் கூட அடிக்காமல் விராட் கோலி விளையாடியுள்ளார்.
கடைசியாக 2019-ம் ஆண்டு நடந்த வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சதம் அடித்திருந்தார் .அதன்பின்னர் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. இதன்மூலம் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக விராட் கோலி சதம் அடிக்காமல் இருந்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்கள் அடித்துள்ள விராட்கோலி, விரைவில் சச்சினின் சாதனையான 100 சதங்களை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் அவர் இரண்டு ஆண்டுகளாக ஒரு சதம் கூட அடிக்காமல் இருப்பது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.