என்னய்யா இது..! ‘கேப்டனே இப்படி சொன்னா எப்படி’.. கோலி இப்படி ‘பதில்’ சொல்வார்ன்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.. கபில் தேவ் கடும் அதிருப்தி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநியூஸிலாந்து அணிக்கு எதிரான தோல்வி குறித்து விராட் கோலி கூறிய பதிலால் முன்னாள் கேப்டன் கபில் தேவ் அதிருப்தி அடைந்துள்ளார்.
துபாய் மைதானத்தில் நடந்த டி20 உலகக்கோப்பை தொடரின் 28-வது லீக் போட்டியில் இந்தியாவும், நியூஸிலாந்தும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 110 ரன்களை எடுத்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி, 14.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
முன்னதாக பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த சூழலில் நியூஸிலாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியிலும் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை தழுவியுள்ளது. இதனால் நெட் ரன்ரேட் -1.609 ஆக குறைந்துள்ளது. இதன்காரணமாக டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கு இந்திய அணி நுழைவது சந்தேகம்தான் என சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், நியூஸிலாந்து அணிக்கு எதிரான தோல்வி குறித்து பேசிய கேப்டன் விராட் கோலி, ‘உண்மையை சொல்ல வேண்டுமானால், நாங்கள் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் தைரியமாக செயல்படவில்லை. அதேபோல் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடும்போது வீரர்களிடம் உத்வேகமும், துணிச்சலும் இல்லை. இந்திய அணிக்காக விளையாடும்போது நிறைய எதிர்பார்ப்பும், நெருக்கடிகளும் இருக்கும். அதனால் எப்போது விளையாடினாலும் அதிக அழுத்தமாக தான் இருக்கும். இதை ஒரு அணியாக செயல்பட்டால் முறியடிக்க முடியும். ஆனால் கடைசி இரண்டு போட்டிகளில் நாங்கள் அதை செய்யவில்லை என்பதுதான் உண்மை’ என அவர் கூறியிருந்தார்.
கோலியின் இந்த பதிலால் அதிர்ச்சியடைந்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், ‘விராட் கோலி போன்ற முன்னணி வீரரிடம் இருந்து இப்படியொரு பதிலை நான் எதிர்பார்க்கவில்லை. இதுபோன்ற வார்த்தைகள் எல்லாம் பலவீனமானவர்களிடம் இருந்துதான் வரும். ஆனால் ஒரு அணியை வழி நடத்தும் வீரரிடம் இருந்து இந்த வார்த்தை வந்தால், பின்னர் மற்ற வீரர்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்’ என கடும் அதிருப்தி தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘இந்த சமயத்தில் கோலிக்கு நிறைய அழுத்தம் இருக்கலாம். ஆனால் ஒரு கேப்டனாக அவர் இப்படி பேசியதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. அவரின் இந்த பதில் மொத்த அணியின் மன வலிமையை பாதிக்கும் விஷயமாகவே நான் பார்க்கிறேன். இதுபோன்ற கடினமான காலகட்டத்தில் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ஆலோசகர் தோனி ஆகியோர் தங்களது அனுபவத்தை பயன்படுத்தி அணியை ஊக்குவிக்க வேண்டும்’ என கபில் தேவ் தெரிவித்துள்ளார்.