‘ஷர்துல் தாகூரை எப்போ டீம்ல எடுப்பீங்க..?’ எல்லாரும் கேட்கும் ஒரே கேள்வி.. ஒருவழியாக மவுனம் கலைத்த கோலி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் ஷர்துல் தாகூரை சேர்ப்பது குறித்து கேப்டன் விராட் கோலி முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை (T20 World Cup) தொடரில் இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை சந்தித்தது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 151 ரன்களை எடுத்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 17.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 152 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு விக்கெட்டை கூட இந்திய பந்துவீச்சாளர்களால் எடுக்கமுடியாமல் போனது பெரும் விமர்சனத்துக்குள்ளானது.
இந்த நிலையில், இன்று (31.10.2021) நியூஸிலாந்தை எதிர்த்து இந்தியா விளையாட உள்ளது. இப்போட்டியில் இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என முன்னாள் வீரர்கள் அறிவுறுத்தியுள்ளனர். குறிப்பாக இளம் ஆல்ரவுண்டர் ஷர்துல் தாகூரை அணியில் சேர்க்க வேண்டும் என்றும் பலரும் கூறி வருகின்றனர்.
அதற்கு காரணம் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, சமீப காலமாக பவுலிங் செய்யாமல் இருந்து வருகிறார். மேலும் பேட்டிங்கிலும் பெரிய அளவில் ரன்களை அவர் எடுக்கவில்லை. அதேபோல் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாரும், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்துவீசவில்லை. அதனால் இவர்கள் இருவரில் ஒருவருக்கு பதிலாக ஷர்துல் தாகூரை விளையாட வைக்கலாம் என இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், இதுதொடர்பாக விளக்கமளித்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ‘இந்திய அணியின் திட்டத்தில் நிச்சயம் ஷர்துல் தாகூர் இருக்கிறார். அவர் தொடர்ந்து தனது திறமையை நிரூபித்து வருகிறார். ஷர்துல் தாகூர் எப்போதும் அணிக்கு பலனளிக்க கூடிய வீரர் தான். ஆனால் அவர் எந்த இடத்தில் சரியாக இருப்பார், எப்போது விளையாடுவார் என்பது குறித்து இப்போதைக்கு எதையும் கூற முடியாது’ எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘இந்திய அணிக்கு 6-வது நிச்சயம் தேவைதான். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நாம் முதலில் பவுலிங் செய்திருந்தால், நிச்சயம் நான் 6-வது பவுலராக செயல்பட்டிருப்பேன். ஆனால் குறைவான இலக்கைக் கட்டுப்படுத்த வேண்டி இருந்ததால், முதன்மை பவுலர்களை மட்டுமே பயன்படுத்தினோம்’ என விராட் கோலி கூறியுள்ளார்.