5-6 வருசத்துக்கு முன்னாடியே.. 'கோலி'ய பத்தி 'தோனி' என்கிட்ட சொன்ன 'விஷயம்'.. மனம் திறந்த 'பீட்டர்சன்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக தற்போது செயல்பட்டு வரும் விராட் கோலி (Virat Kohli), அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் மிகச் சிறப்பாக தலைமையாற்றி வருகிறார்.

கடந்த சில ஆண்டுகளில், அவரது தலைமையிலான இந்திய அணி, அதிக தொடர்களை கைப்பற்றி, பல சாதனைகளையும் புரிந்து வருகிறது. அதே போல, கிரிக்கெட் உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேனாகவும் அவர் திகழ்ந்து வருகிறார். மேலும், தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரிலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாகவும், கோலி அற்புதமாக செயல்பட்டு வருகிறார். இந்த சீசனில், இதுவரை 6 போட்டிகள் விளையாடியுள்ள பெங்களூர் அணி, அதில் 5 போட்டிகளில் வெற்றி பெற்று, பலம் வாய்ந்த அணியாக திகழ்கிறது.
இந்நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கெவின் பீட்டர்சன் (Kevin Pietersen), கோலி குறித்து, முன்னாள் இந்திய கேப்டன் தோனி (Dhoni), சொன்ன சில விஷயங்களை தற்போது பகிர்ந்துள்ளார். 'சுமார் 5 முதல் 6 ஆண்டுகளுக்கு முன், ஐபிஎல் தொடரில் ரைசிங் புனே சூப்பர் ஜெய்ன்ட்ஸ் (RPS) அணிக்காக விளையாடிக் கொண்டிருந்தேன்.
அந்த சமயத்தில், தோனி என்னிடம், "விராட் தனது எனர்ஜி மற்றும் பிட்னெஸ் ஆகியவற்றையும், மைதானத்தில் உற்சாகமாக இருக்கும் விஷயத்தையும் இனிவரும் ஆண்டுகளில் அப்படியே அவரால் வைத்திருக்க முடியுமா என்பதைத் தான் வரும் காலங்களில் பார்க்க விரும்புகிறேன்" என என்னிடம் கூறினார்.
தோனி இப்படி கூறி, பல ஆண்டுகள் ஆன போதும், கோலி தனது சிறு வயதில் எப்படி இருந்தாரோ, அதே எனர்ஜியுடன் தான் தற்போதும் வலம் வருகிறார். அது மட்டுமில்லாமல், கடந்த 2008 ஆம் ஆண்டு, ஆர்சிபி அணியில் அவரை பார்த்த போது எப்படி இளமையுடன் துடிப்பாக கோலி இருந்தாரோ, அதே போலத் தான் தற்போதும் இருக்கிறார்.
உணவுமுறை, உடற்பயிற்சி, தடகள திறன் உள்ளிட்ட அனைத்திலும் சிறப்பான முறையை பின்பற்றும் கோலி, இந்திய கிரிக்கெட் அணிக்கு மிகச் சிறந்த உதாரணமாக திகழ்கிறார். இந்திய கிரிக்கெட் அணிக்கு கோலி மிகப்பெரிய ஹீரோ' என உடல் மற்றும் விளையாட்டு விஷயத்தில், கோலி சிறப்பாக தன்னை மேம்படுத்திக் கொண்டு வருவதை பீட்டர்சன் பாராட்டியுள்ளார்.

மற்ற செய்திகள்
