"உன்னால நிச்சயமா அது முடியாது 'தம்பி'.." இளம் வீரரிடம் 'கோலி' சொன்ன 'விஷயம்'!... ஒரு ஆண்டுக்கு பிறகு வெளிவந்த 'ரகசியம்'!!.. நடந்தது என்ன??..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடர் மூலம் பல இளம் வீரர்கள், தங்களது திறமையை வெளிக்காட்டுவதற்கான வாய்ப்பாக அமையும் நிலையில், இந்த சீசனிலும் சில இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.
இதில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக கடந்த 2019 ஆம் ஆண்டு, ஐபிஎல் சீசனில் அறிமுகமான இளம் வீரர் ரியான் பராக் (Riyan Parag), இந்த தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில், 11 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 25 ரன்கள் எடுத்து அதிரடி காட்டியிருந்தார். இந்நிலையில், இந்திய கேப்டன் விராட் கோலி, கடந்த சீசனில் தனக்கு வழங்கிய அறிவுரை குறித்து, ரியான் தற்போது மனம் திறந்துள்ளார்.
'கடந்த சீசனின் போது நான் விராட் கோலியிடம் (Virat Kohli) பேசினேன். "நீ எப்படியும் ஆரஞ்சு தொப்பியை வாங்கப் போவதில்லை. ஏனென்றால், நீ 5 அல்லது 6 ஆவது வீரராக களமிறங்குகிறாய். இதனால், நீ அதிக ரன்கள் அடித்து ஆரஞ்சு தொப்பியை வாங்குவது பற்றி, யோசிக்கக் கூடாது. அணிக்கு இக்கட்டான சூழ்நிலை ஏற்படும் முக்கியமான நேரத்தின் போது, அணிக்கு தேவையான 20 முதல் 30 ரன்களை நீ அடிப்பது பற்றி மட்டுமே யோசிக்க வேண்டும்" என என்னிடம் அறிவுரை கூறினார்.
அவரது அறிவுரையின் படி, தற்போதெல்லாம் நான் அதிக ரன்கள் அடிப்பது பற்றி யோசிக்கவில்லை. என்னால் அணிக்கு என்ன உதவி செய்ய முடியுமோ, அதனை மட்டுமே நான் செய்து வருகிறேன்' என்றார்.
தொடர்ந்து, ஐபிஎல் தொடர் குறித்து பேசிய ரியான் பராக், 'மாநில அணிக்காக நாம் ஆடும் போது, இந்திய அணியின் சிறந்த வீரர்களுடன் சேர்ந்து ஆட வாய்ப்பு கிடைக்கும். ஆனால், ஐபிஎல் தொடரில், ஸ்மித், ஸ்டோக்ஸ், பட்லர், ஆர்ச்சர் போன்ற வெளிநாட்டு வீரர்களுடன் இணைந்து ஆடுகிறேன்.
இது சிறந்த ஒரு ஆக்கப் பூர்வமான தாக்கத்தை எனக்குள் ஏற்படுத்துகிறது. அதே போல, ஐபிஎல் தொடரில் விராட் கோலி, தோனி ஆகியோருக்கு எதிராக ஆடும் போது, அது மன ரீதியிலான பலத்தையும் கொடுக்கிறது' என ரியான் தெரிவித்துள்ளார்.