"நான் இத சொன்னா, கண்டிப்பா 'டிவில்லியர்ஸ்'க்கு பிடிக்காது.. இருந்தாலும் நான் சொல்றேன்.." போட்டிக்கு பிறகு 'கோலி' பகிர்ந்த 'சுவாரஸ்ய' தகவல்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடெல்லி கேப்பிடல்ஸ் (DC) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) ஆகிய அணிகள், நேற்று மோதிய நிலையில், பெங்களூர் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணியில், அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தாலும், டிவில்லியர்ஸ் (Devilliers) மட்டும் தனியாளாக நின்று, டெல்லி அணியினரின் பந்து வீச்சை சிதறடித்தார். இறுதி வரை களத்தில் நின்ற டிவில்லியர்ஸ், 42 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 75 ரன்கள் எடுத்திருந்தார்.
இதனால், இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணியில், பண்ட் மற்றும் ஹெட்மயர் ஆகியோர் சிறப்பாக ஆடிய போதும், ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் காரணமாக, பெங்களூர் அணி புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்தது. இதனைத் தொடர்ந்து, வெற்றிக்கு பின் பேசிய பெங்களூர் கேப்டன் கோலி (Kohli), 'ஒரு கட்டத்தில் போட்டி கையை விட்டுச் சென்று விட்டது என்றே எண்ணினேன். ஆனால், சிராஜ் கடைசி ஓவரில் சிறப்பாக பந்து வீசி, வெற்றியை பெற்றுத் தந்தார்.
நாங்கள் முதலில் பேட்டிங் செய்த போது, அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தோம். ஆனால், டிவில்லியர்ஸ் அற்புதமாக பேட்டிங் செய்ததால், நாங்கள் நல்ல ஸ்கோரை எட்டினோம். அதன் பிறகு, டெல்லி வீரர் ஹெட்மயர் களத்தில் நின்றதால், கொஞ்சம் பதற்றம் இருந்தது. ஆனால், இந்த ஆட்டத்தின் போது, பனிப் பொழிவு இல்லாத காரணத்தால், நாங்கள் சிறப்பாக பந்து வீசி வெற்றி பெற்றோம்' என்றார்.
தொடர்ந்து, டிவில்லியர்ஸ் பேட்டிங் பற்றி பேசிய கோலி, 'நான் இப்போது ஒரு விஷயத்தைச் சொன்னால், நிச்சயம் டிவில்லியர்ஸிற்கு பிடிக்காது. இருந்தாலும் சொல்கிறேன்.
அவர் கடைசி 5 மாதங்களில் கிரிக்கெட் போட்டிகள் விளையாடவேயில்லை. ஆனால், அவர் பேட்டிங் செய்ததை பார்த்தால், சர்வதேச போட்டிகளில் ஆடவில்லை என்ற உணர்வையே தரவில்லை. இன்னும் நிறைய போட்டிகளில், ஆர்சிபி அணிக்காக, இது போன்று அவர் ஆடித் தர வேண்டும்.
எங்கள் அணிக்கு கிடைத்த மிகப் பெரிய சொத்து அவர். நான் இதனை மீண்டும் சொல்கிறேன் (சிரித்துக் கொண்டே). அவர் ஐந்து மாதங்களாக கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ளவில்லை. இருந்த போதும் அவரது ஆட்டத்தை பாருங்கள்' என கோலி, டிவில்லியர்ஸை பாராட்டி கருத்து தெரிவித்துள்ளார்.