'கடைசி' ஓவரில் பொளந்து கட்டிய 'ஜடேஜா'.. "இதுக்கு எல்லாம் காரணம், அந்த ஓவருக்கு முன்னாடி.. தோனி பாய் கொடுத்த 'ஐடியா' தான்.." சீக்ரெட்டை உடைத்த 'ஜடேஜா'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு14 ஆவது ஐபிஎல் சீசனில், தொடர்ந்து 4 போட்டிகளில் வெற்றி பெற்ற பெங்களூர் அணி, சென்னை அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில், முதல் தோல்வியை பதிவு செய்தது.

இந்த போட்டியில், ஆரம்பம் முதலே சென்னை அணி, போட்டியைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த நிலையில், சென்னை வீரர் ஜடேஜா (Jadeja), கடைசி ஓவரில் 5 சிக்ஸர்களுடன் 36 ரன்கள் எடுத்து அசத்தியிருந்தார். இதனால், சென்னை அணி 191 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய பெங்களூர் அணி, 122 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. பேட்டிங்கில் பட்டையைக் கிளப்பிய ஜடேஜா, பந்து வீச்சிலும் அசத்தியிருந்தார். 13 ரன்கள் மட்டுமே கொடுத்து, 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
முன்னதாக, பெங்களூர் அணியின் கடைசி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேல் (Harshal Patel) வீசினார். இந்த சீசனில், அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவர்களில் முதலிடத்தில் இருக்கும் அவர், சென்னை அணிக்கு எதிரான போட்டியிலும் 3 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். ஆனால், அவர் வீசிய கடைசி ஓவரில் தான் ஜடேஜா 5 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 36 ரன்கள் அடித்தார். ஹர்ஷல் படேல் ஒரு நோ பாலும் வீச, மொத்தம் 37 ரன்கள், அந்த ஓவரில் எடுக்கப்பட்டது.
அது மட்டுமில்லாமல், ஐபிஎல் தொடரில், ஒரே ஓவரில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்னாகவும் இது பதிவானது. இந்நிலையில், ஆட்ட நாயகன் விருது வென்ற பின், கடைசி ஓவரில் அதிக ரன்கள் அடித்தது பற்றி பேசிய ஜடேஜா, 'அந்த கடைசி ஓவரில், எனக்கு வாய்ப்பு கிடைத்தால், நிறைய ரன்கள் அடிக்க வேண்டும் என முடிவு செய்திருந்தேன். ஹர்ஷல் படேலின் ஓவருக்கு முன்பாக, தோனி பாய் என்னிடம் சில ஆலோசனைகளைக் கூறினார். "ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே தான் ஹர்ஷல் படேல் பந்து வீசுவார்" என என்னிடம் தோனி தெரிவித்தார்.
அதன்படி, ஆஃப் சைடில் மட்டுமே கவனம் செலுத்தி, ரன் அடிக்க நான் தயாரானேன். ஹர்ஷலும் அதே திசையில் பந்து வீச, முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்தேன். அதிர்ஷ்டவசமாக அதன் பிறகு, எல்லா பந்துகளும் சரியாக பேட்டில் பட, அந்த ஓவரில் அதிக ரன்களை குவிக்க முடிந்தது' என கடைசி ஓவரில் அதிக ரன்கள் குவித்ததற்கு பின்னால் உள்ள ரகசியத்தை ஜடேஜா பகிர்ந்து கொண்டார்.

மற்ற செய்திகள்
