மெஸ்ஸிக்காக கண் கலங்கிய கேரள சிறுவன்.. வேதனையுடன் அப்பவே கணிச்ச சூப்பர் விஷயம்.. கொண்டாடும் கால்பந்து ரசிகர்கள்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகத்தாரில் வைத்து நடந்த கால்பந்து உலக கோப்பைத் தொடர் சமீபத்தில் முடிவடைந்த நிலையில், மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி கோப்பையை கைப்பற்றி இருந்தது.
36 ஆண்டுகளுக்கு பிறகு அர்ஜென்டினா அணி கால்பந்து உலக கோப்பையை கைப்பற்றியது ஒரு பக்கம் இருக்க, அந்த அணியின் நட்சத்திர வீரர் மற்றும் கால்பந்து உலகின் நம்பர் 1 வீரராக கருதப்படும் மெஸ்ஸி கோப்பையை கைப்பற்றியதை ரசிகர்கள் பெரிதும் கொண்டாடி வருகின்றனர்.
கால்பந்து போட்டிகளில் எக்கச்சக்க சாதனைகள் படைத்துள்ள மெஸ்ஸி, ஒரு முறை கூட உலக கோப்பையை கைப்பற்றியது கிடையாது. 2014 ஆம் ஆண்டு, அர்ஜென்டினா அணி இறுதி போட்டிக்கு முன்னேறி இருந்தாலும் உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவற விட, கண் கலங்கி போனார் மெஸ்ஸி. அவரது இறுதி உலக கோப்பைத் தொடராக தற்போது நடந்து முடிந்த தொடர் கருதப்பட்டு வந்த நிலையில், அவர் கோப்பையை வெல்ல வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த வேளையில், அது சிறப்பாகவும் நடந்துள்ளது.
இந்த நிலையில், கேரள சிறுவன் குறித்த செய்தி தான் தற்போது கால்பந்து ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசு பொருளாக மாறி உள்ளது.
லீக் சுற்றில் தங்களின் முதல் போட்டியியல் சவூதி அரேபியா அணிக்கு எதிராக அர்ஜென்டினா அணி அதிர்ச்சி தோல்வி அடைந்திருந்தது. இதனால், அடுத்தடுத்த சுற்றுகளில் பலம் வாய்ந்த அர்ஜென்டினா அணி முன்னேறுமா என்றதும் திடீரென கேள்விக்குறியாகி இருந்தது. ஆனால், அதன் பின்னர் தொடர்ந்து வெற்றிகளை குவித்த அர்ஜென்டினா அணி, தற்போது இறுதி போட்டி வரை முன்னேறி கோப்பையையும் வென்றுள்ளது.
முன்னதாக, சவூதி அரேபியா அணிக்கு எதிராக அர்ஜென்டினா தோல்வி அடைந்த சமயத்தில், கால்பந்து ரசிகர்கள் அதிகமுள்ள கேரள மாநிலத்தை சேர்ந்த நிப்ராஸ் என்ற சிறுவன், மனம் கலங்குவது தொடர்பான வீடியோ அதிகம் வைரலாகி இருந்தது. அந்த வீடியோவில் கண்ணீரை அடக்கிக் கொண்டு சிறுவன் நிப்ராஸ் நிற்க, அவரது நண்பர்கள் அர்ஜென்டினாவின் தோல்வியை கிண்டல் அடிக்கவும் செய்கின்றனர். கண்ணீரை அடக்கி கொண்டு பேசும் சிறுவன் நிப்ராஸ், மெஸ்ஸி மற்றும் அர்ஜென்டினா அணி கம்பேக் கொடுத்து உலக கோப்பையை கைப்பற்றும், பொறுத்திருந்து பாருங்கள் என்பது போல சிறுவன் தன்னம்பிக்கையுடன் தெரிவித்திருந்தார்.
சிறு வயதிலேயே கால்பந்து போட்டியில் இந்த அளவுக்கு விருப்பத்தோடு பார்த்து கண்ணீரும் வடித்த காசர்கோடு சிறுவன் நிப்ராஸ் வீடியோ அதிக அளவில் கவனம் பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து பையனூர் பகுதியைச் சேர்ந்த டிராவல்ஸ் நிறுவனம் ஒன்று, இன்ப அதிர்ச்சி ஒன்றை நிப்ராஸுக்கு கொடுத்திருந்தது. கத்தாரில் நடந்து முடிந்த கால்பந்து உலக கோப்பையை காணவும் அவரை கத்தாருக்கு அழைத்து சென்றது. அங்கே போட்டிகளை கண்டுகளித்த சிறுவன் நிப்ராஸ், தற்போது கேரளாவுக்கும் திரும்பி உள்ளார்.
அவரது ஊரில் பிரபலமான நபராகவும் நிப்ராஸ் மாறி உள்ள நிலையில், சவூதி அரேபியா அணிக்கு எதிராக அர்ஜென்டினா தோல்வி அடைந்த போது அவர் சொன்ன விஷயம் தான் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. நிச்சயம் அர்ஜென்டினா அணி கம்பேக் கொடுத்து மெஸ்ஸி சிறப்பாக ஆடி அணியை வெற்றி பெறச் செய்வார் என குறிப்பிட்டிருந்தார். தற்போது அதே போல நடந்துள்ளதால், அர்ஜென்டினா ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகியும் வருகிறார் நிப்ராஸ். முன்பே சரியாக கணித்து சிறுவன் சொன்ன விஷயம், பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.