"இவரு என்னப்பா இங்க?".. அர்ஜென்டினா ஜெயிச்ச கப்புடன் மைதானத்தில் வலம் வந்த SALT BAE!!.. இணையத்தை ஆக்கிரமித்த சம்பவம்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகால்பந்து உலக கோப்பைத் தொடரின் இறுதி போட்டியில் பிரான்ஸ் அணியை பெனால்டி ஷூட்அவுட்டில் வீழ்த்திய அர்ஜென்டினா அணி, மூன்றாவது முறையாக கால்பந்து கோப்பையை கைப்பற்றி உள்ளது.

முன்னதாக பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகள் இறுதி போட்டிக்கு முன்னேற்றம் கண்டிருந்தது. மேலும், இரு அணிகளும் கத்தாரில் மோதிய இறுதி போட்டி, ஆரம்பத்தில் இருந்தே விறுவிறுப்பை எகிற வைக்கும் வகையில் தான் சென்று கொண்டிருந்தது.
முதல் பாதியில், அர்ஜென்டினா அணி இரண்டு கோல்கள் அடிக்க இரண்டாவது பாதியில் பிரான்ஸ் வீரர் எம்பாப்பே அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்து அர்ஜென்டினா அணிக்கு அதிர்ச்சி அளித்திருந்தார். இதனால், இரு அணிகளும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்க யார் வெற்றி பெறுவார்கள் என்று விறுவிறுப்பு கடைசி நிமிடம் வரை நீடித்திருந்தது. 3 - 3 என்ற கணக்கில் கோல்கள் சமனாக, பெனால்டி சூட்அவுட் நடைபெற்றது.
இதில் அர்ஜென்டினா அணி 4 - 2 என்ற கணக்கில் வெற்றி பெற்று உலக கோப்பையையும் தற்போது சொந்தமாக்கி உள்ளது. இந்த நிலையில், பிரபல செஃப் Salt Bae மைதானத்தில் அர்ஜென்டினா வீரர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் அதிகம் வைரலாகி வருகிறது.
துருக்கியை சேர்ந்த பிரபல செஃப் நர்செட் கோக்சே. இவர் மக்கள் மத்தியில், Salt Bae என்ற பெயரில் அறியப்படுகிறார். உலகளவில் கவனம் பெறும் மக்கள் பலருக்கும் ஒவ்வொரு விதமான தனித்துவமான ஸ்டைல் இருக்கும். அப்படித் தான், Salt Bae என அழைக்கப்படும் நர்செட்டுக்கும் ஒரு ஸ்டைல் உள்ளது. சமையல் செய்யும் போது, இறைச்சிகளை வித்தியாசமாக வெட்டுவது, மேலும் உணவு பொருளில் உப்பை யாரும் போடாத வகையில், வித்தியாசமாக உணவில் போடுவது என உலகம் முழுவதும் இவர் செய்த விஷயம், அதிக வைரலாகி இருந்தது.
அப்படி ஒரு சூழலில், தற்போது நடந்து முடிந்த கால்பந்து உலக கோப்பைத் தொடரின் இறுதி போட்டியில், VVIP பாஸ் மூலம் மைதானத்திற்கு அவர் சென்றதாக தெரிகிறது.
போட்டியை கண்டு களித்த சால்ட் பே, அர்ஜெண்ட்டினா அணி கோப்பையை கைப்பற்றிய பிறகு அவர்களுடன் சேர்ந்து கொண்டும், உலக கோப்பையை கையில் வைத்துக் கொண்டும் சில புகைப்படங்களை எடுத்து அவற்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மற்ற வீரர்களின் பதக்கங்களை கடித்துக் கொண்டு இருப்பது போன்றும், சில வீரர்கள் சால்ட் பே போல உப்பு போடும் செயலை கூட செய்வதும் புகைப்படங்கள் மூலம் தெரிய வருகிறது.
சால்ட் பே பகிர்ந்த அனைத்து புகைப்படங்களும் மில்லியன் கணக்கில் லைக்குகளை தாண்டி சென்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
