‘கோலியே இப்படி பேசுனா எப்படி..?’ பாகிஸ்தானுக்கு எதிரான தோல்வி பற்றி கோலி சொன்ன பதில்.. அஜய் ஜடேஜா கடும் அதிருப்தி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபாகிஸ்தானுக்கு எதிரான தோல்வி குறித்து கேப்டன் விராட் கோலி கூறிய கருத்துக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மாவும், கே.எல்.ராகுலும் களமிறங்கினர். இதில் ரோஹித் ஷர்மா, தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே அவுட்டாகி வெளியேறினார். இதனைத் தொடர்ந்து கே.எல்.ராகுல் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் 6 ரன்களுக்கு 2 முக்கிய விக்கெட்டுகளை இந்தியா இழந்து தடுமாறியது.
அப்போது களத்தில் இருந்த கேப்டன் விராட் கோலி (57 ரன்கள்) நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். அதேபோல் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தும் 39 ரன்கள் அடித்து ஆறுதல் அளித்தார் அதனால் 20 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்களை இந்தியா எடுத்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 17.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 152 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்த நிலையில், போட்டி முடிந்தபின் பேசிய கேப்டன் விராட் கோலி (Virat Kohli), இப்போட்டியில் பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடியதாகவும், விக்கெட் எடுக்க அவர்கள் இடமே கொடுக்கவில்லை என்றும் கூறினார். மேலும் ஆரம்பத்திலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்தது பின்னடைவாக அமைந்துவிட்டதாக கூறினார்.
இதற்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா (Ajay Jadeja) அதிருப்தி தெரிவித்துள்ளார். அதில், ‘கோலி கூறிய பதிலை கேட்டேன். இரண்டு விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்ததால், நாம் பின்னடவை கண்டோம் என கோலி சொன்னது எனக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. கோலி போன்ற ஒரு வீரர் களத்தில் இருக்கும்போது எப்படி ஆட்டம் முடிந்து போகும், இதை எப்படி அவரே கூறுகிறார்? அந்த சமயத்தில் 2 பந்துகளை கூட கோலி ஆடியிருக்கவில்லை. ஆனால் அவர் மனநிலை இழந்த 2 விக்கெட்டுகளைப் பற்றிதான் இருந்துள்ளது. இந்த மனநிலைதான் பாகிஸ்தானுக்கு எதிரான தோல்வியை முடிவு செய்துள்ளது’ என அஜய் ஜடேஜா கூறியுள்ளார்.