முதல் ஆளா ஏலத்துல போன வில்லியம்சன்.. "ஆனாலும் இப்டி ஒரு விலையா.?".. மனம் குமுறும் ரசிகர்கள்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை சுற்றியுள்ள பணிகள் மிக மும்முரமாக நடைபெற்று வருகிறது. இன்று (23.12.2022) ஐபிஎல் மினி ஏலம் நடைபெற்று வரும் நிலையில், மொத்தமுள்ள 10 அணிகளும் எந்தெந்த வீரர்களை தேர்வு செய்ய போகிறது என்பதை அறியவும் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.
Also Read | ஐபிஎல் மினி ஏலம் : வரலாறு படைத்த சுட்டிக் குழந்தை சாம் குர்ரான்.. ஆத்தாடி இத்தனை கோடியா?
2022 ஆம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய இரண்டு அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டிருந்தது. இதில், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, அறிமுக தொடரிலேயே ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி அசத்தி இருந்தது.
இதனைத் தொடர்ந்து, ஐபிஎல் மினி ஏலம் குறித்த தகவல் வெளியாகி இருந்த நிலையில், அனைத்து அணிகளுமே தங்கள் தக்க வைத்துக் கொண்ட வீரர்கள் மற்றும் விடுவித்த வீரர்கள் பட்டியலை வெளியிட்டிருந்தது. இதற்கடுத்து, கேரள மாநிலம் கொச்சியில் மினி ஏலம் தற்போது நடைபெற்று வருகிறது. ஐபிஎல் போட்டிகள் என்றாலே அதில் அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்த கூடிய ஒரு பகுதி தான் இந்த ஏலம். ஒவ்வொரு அணிகளும் சிறந்த வீரர்களை எடுக்க கடுமையாக போட்டி போடவும் செய்வார்கள்.
இதில் பல வீரர்கள் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளதால், மிகவும் ஆவலுடன் ஏலத்தை ரசிகர்கள் பார்த்து வருகின்றனர். இதில், முதல் ஆளாக கேன் வில்லியம்சன் பெயர் அறிவிக்கப்பட்டது. 2 கோடி அடிப்படை விலையில் அறிவிக்கப்பட்ட நியூசிலாந்து வீரர் வில்லியம்சனை ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி அதே விலையில் எடுத்திருந்தது.
முன்னதாக, தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேன் வில்லியம்சனை ஏலத்தில் எடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். ஆனால், கடைசியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 2 கோடி ரூபாய்க்கு அவரை ஏலத்தில் எடுத்துள்ளது.
இந்த நிலையில், வில்லியம்சனின் கடந்த ஆண்டு தொகையும் தற்போதைய தொகையையும் ஒப்பிட்டு ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். கடந்த ஆண்டு ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணி கேன் வில்லயம்சனை 14 கோடி ரூபாய்க்கு தக்க வைத்துக் கொண்டது. ஆனால், மினி ஏலம் முன்பாக அவரை ஹைதராபாத் அணி விடுவிக்க, தற்போது மினி ஏலத்தில் இருந்த அவரை 2 கோடி ரூபாய்க்கு குஜராத் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. ஒரே வருடத்தில் 12 கோடி ரூபாய் விலை வித்தியாசம் வந்ததை தான் ரசிகர்கள் குறிப்பிட்டு கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.