'திட்டம் போட்டு சதி செய்றாங்க'!.. 'இங்கிலாந்து அணியில் உள்ளடி அரசியல் செய்வது யார்'?.. உச்சகட்ட கோபத்தில் கொந்தளிக்கும் வாகன்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், சீனியர் வீரர் ஒருவரின் பேச்சைக் கேட்டதால் தான் 2வது டெஸ்ட் போட்டியில் அந்த அணி மோசமான தோல்வியை அடையக் காரணம் என இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் விளாசியுள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றி பெற்றது. இறுதி நிமிடம் வரை பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ், இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை திணறடித்தார்.
இந்த 2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இரு அணிகளும் சம பலத்துடனே இருந்தன. முதல் இன்னிங்ஸில் இந்தியாவை விட இங்கிலாந்து அணி 27 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. ஆனால் 2வது இன்னிங்ஸில் இந்திய அணிக்கு சாதகமாக காற்று வீசியது. அவர்களின் ரன் குவிப்புக்கு முகமது சிராஜ் சவாலாக பந்து வீசியதால், அந்த அணி 2வது இன்னிங்ஸில் 120 ரன்களுக்கு சுருண்டது.
இங்கிலாந்து போன்ற கடினமான களத்தில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களே ரன் எடுக்க சிரமப்பட்டனர். ஆனால், பும்ரா மற்றும் ஷமி சிறிது நேரம் செய்த சம்பவம் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சகாப்தமாக அமைந்துவிட்டது. இங்கிலாந்து வீரர்கள் வேண்டுமென்றே விக்கெட் எடுக்க முற்படாமல் பும்ராவை தாக்கும் வகையில் பந்துகளை வீசினர். அதுமட்டுமின்றி ஒவ்வொரு ஓவருக்கும் இடையே பும்ராவை சீண்டினர்.
இந்த டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில், இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, அந்த அணியின் சீனியர் பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சன் பேட்டிங் செய்ய வந்த போது, பும்ரா ஒரே ஓவரில் தொடர்ந்து பவுன்சர் பந்துகள் போட்டு அசத்தினார். இதில் ஆண்டர்சன் ஹெல்மெட், தோள்பட்டை, கால் என அனைத்து இடங்களிலும் பயங்கரமாக அடி வாங்கினார். பும்ரா வேண்டுமென்றே பவுன்சர் போட்டதாக நினைத்து கடுப்பான ஆண்டர்சன், பழிவாங்குவதற்காகவே தனது அணியினருடன் ஆட்டத்தில் அப்படி நடந்துக்கொண்டதாகத் தெரிகிறது.
அதைத் தொடர்ந்து, இங்கிலாந்து வீரர்களின் பந்துவீச்சை நன்கு புரிந்துக் கொண்ட முகமது ஷமி - பும்ரா ஜோடி, பவுண்டரி, சிக்ஸர் என பேட்டை சுழற்றினர். இருவரும் சுதாரித்துக் கொண்டு காட்டிய அதிரடியால் 9வது விக்கெட்டிற்கு இந்த ஜோடி 77 ரன்களை குவித்தது. முகமது ஷமி 56 ரன்களும், ஜஸ்பிரித் பும்ரா 34 ரன்களும் விளாசினர். இதனால், இந்திய அணியின் ஸ்கோர் 298 ரன்களுக்கு எகிறியது. மேலும், அதிக ஸ்கோரை அடிக்க முடியாமல் இங்கிலாந்து தோல்வியடைந்தது.
இதற்கிடையே, இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட்டை சீனியர் வீரர் யாரோ ஒருவர் கட்டுப்படுத்தியதே தோல்விக்கு காரணம் என மைக்கேல் வாகன் குற்றம்சாட்டியுள்ளார். அவர் பேசுகையில், "கடந்த சில வருடங்களில் இங்கிலாந்து அணியின் மிக மோசமான ஆட்டம் இதுதான். இப்படி ஒரு சொதப்பலை பார்த்ததே இல்லை. பும்ராவிடம் எதற்காக அதிக பவுன்சர்கள் வீசப்பட்டன. இங்கிலாந்து அணியை அப்போது ஜோ ரூட் வழிநடத்தவில்லை எனத்தெரிகிறது. ரூட் வேறு யாரோ சீனியர் வீரரின் பேச்சைக் கேட்டு தவறான வழியில் சென்றிருக்கிறார்.
அந்த சீனியர் வீரர் தனிப்பட்ட காரணங்களுக்காக ரூட்டை தவறாக வழிநடத்தியிருக்க வேண்டும். பயிற்சியாளர் சில்வர்வுட் அப்போது என்ன செய்துக்கொண்டிருந்தார் எனத் தெரியவில்லை. கூல் டிரிங்க்ஸ் கொடுக்க மைதானத்திற்கு உள்ளே சென்ற ஏதாவது ஒரு வீரரிடம், ரூட் தவறான திட்டத்தை செயல்படுத்தி வருகிறார் எனத் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், அமைதியாக இருந்துள்ளார். சில்வர்வுட்டால் இங்கிலாந்து அணியை எந்த சரிவில் இருந்து வேண்டுமானாலும் மீட்டிருக்க முடியும். ஆனால், அப்படி நடக்கவில்லை" என்று வாகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.