இருக்குற நிலைமையில இப்போ இதுவேறயா..! இலங்கை அணிக்கு அடிமேல் அடி விழும் சோகம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியில் இலங்கை வீரர்கள் சிலர் விளையாட மாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன்மூலம் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் காயம் காரணமாக இலங்கை வீரர்கள் சிலர் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இங்கிலாந்தில் இருந்து நாடு திரும்பிய வீரர்கள் பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால், இந்தியாவுக்கு எதிரான தொடரில் புதிய அணியை இலங்கை களமிறக்கியுள்ளது.
இந்த புதிய அணியைக் கொண்டு ஒருநாள் தொடரில் விளையாடிய இலங்கை அணி, 2-1 என்ற கணக்கில் இந்தியாவிடம் தோல்வியடைந்தது. இதனை அடுத்து நடைபெற்ற முதல் டி20 போட்டியிலும் இலங்கை தோல்வியை தழுவியுள்ளது. இப்படி உள்ள சூழலில் காயத்தால் அடுத்தடுத்து வீரர்கள் விலகுவது இலங்கை அணிக்கு நெருக்கடி கொடுத்துள்ளது. முன்னதாக இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியின் போது விரலில் காயம் அடைந்த பனுகா ராஜபக்சே, டி20 தொடரில் இருந்து வெளியேறினார்.
இந்த நிலையில் பதும் நிசன்கா மற்றும் அசலங்கா ஆகிய இரண்டு வீரர்கள் காயம் காரணமாக விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் அசலங்கா, இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில், இலங்கை அணியின் சார்பாக அதிக ரன்கள் (44 ) அடித்த வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி முக்கிய வீரர்கள் தொடர்ந்து விலகி வருவது இலங்கை அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி இன்று (27.07.2021) கொழும்பு மைதானத்தில் நடைபெற உள்ளது.

மற்ற செய்திகள்
