VIDEO: 'பழி தீர்க்க துடித்த சிராஜ்'!.. சாம் கரணுடன் களத்தில் முற்றிய வாக்குவாதம்!.. பதறியடித்து ஓடிய கோலி!.. டென்ஷன் நிமிடங்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமுதல் டெஸ்ட் போட்டியின் போது இங்கிலாந்து வீரர் சாம் கரணும், முகமது சிராஜும் மோதல் போக்கில் வாக்குவாத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 4ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி வெறும் 183 ரன்களுக்கு சுருண்டது. சிறப்பாக பந்துவீசிய இந்திய பவுலர்கள் பும்ரா மற்றும் ஷமி முறையே 4 மற்றும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து, முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 278 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேஎல் ராகுல் அதிகபட்சமாக 84 ரன்கள் அடித்தார். அவருக்கு பார்ட்னர்ஷிப் கொடுத்து சிறப்பாக ஆடிய ரவீந்திர ஜடேஜா அரைசதம் (56 ரன்கள்) விளாசினார். முதல் இன்னிங்ஸில் சற்று மெத்தனமாக விளையாடிய இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து சரிவை சந்தித்தது.
ஆனால், 2வது இன்னிங்ஸில் சுதாரித்துக்கொண்டு மிகப்பொருமையாக ரன்களை சேர்த்துள்ளது. நேற்று நடைபெற்ற 4வது நாள் போட்டியில் இங்கிலாந்து அணி தனது 2வது இன்னிங்ஸை தொடர்ந்து ஆடியது.
அதில், தொடக்க வீரர்கள் ராரி பேர்ன்ஸ் 49 பந்துகளில் 18 ரன்களும், சிப்லே 133 பந்துகளை சந்தித்து வெறும் 28 ரன்களையுமே சேர்த்து வெளியேறினர். பின்னர் வந்த கிராவ்லே 6 ரன்களுக்கு அவுட்டாக இங்கிலாந்து அணி தடுமாறியது. அதன் பிறகு ஜோடி சேர்ந்த ஜோ ரூட், பேர்ஸ்டோ ஜோடி சீரான வேகத்தில் ரன்களை உயர்த்தினர். கேப்டன் ஜோ ரூட் 14 பவுண்டரிகளுடன் சதம் (109) அடித்து அசத்தினார். பேர்ஸ்டோ 4 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் சேர்த்தார்.
இந்திய அணிக்கு நீண்ட நேரமாக சவாலை ஏற்படுத்திய இந்த பார்ட்னர்ஷிப்பை இளம் வீரர் முகமது சிராஜ் பிரித்தார். இதன் பிறகு விக்கெட்கள் மளமளவென சரிந்து விழ, இங்கிலாந்து அணி 303 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா ஏற்கனவே 95 ரன்கள் முன்னிலையில் இருந்ததால் 209 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆட்டத்தின் போது முகமது சிராஜ், சாம் கரணிடம் சண்டையிட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இங்கிலாந்து அணியின் இளம் வீரர் சாம் கரண், லோயர் ஆர்டரில் வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். அப்போது ஆட்டத்தின் 74வது ஓவரை வீசிய முகமது சிராஜ், 4வது பந்தை ஷார்ட் வைடாக போட, அதனை சாம் கரண் பவுண்டரிக்கு விளாசினார். இதன் பின்னர் சாம் கரணுக்கு அருகில் வந்த சிராஜ், அவரை நோக்கி ஆக்ரோஷமான வார்த்தைகளை உதிர்த்தார். இதனையடுத்து இருவருக்குள்ளும் வாக்குவாதம் மோசமானது.
இதனால் ஆட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது சிராஜிடம் சென்ற கேப்டன் விராட் கோலி, மிகவும் பொறுமையாக சிராஜை சமாதானம் செய்து பிரச்சினையை தீர்த்து வைத்தார்.
மேலும், நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி சார்பாக சிராஜ் பேட்டிங் செய்துகொண்டிருந்த போது இங்கிலாந்து பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சீண்டலில் ஈடுபட்டார். சிராஜ் நீண்ட நேரமாக சிறப்பாக பேட்டிங் செய்து வந்ததால், அவரை திசைத் திருப்புவதற்காக ஆண்டர்சன் அப்படி செய்தது ரசிகர்களுக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதனை மனதில் வைத்தே சிராஜ் இன்று பதிலடி கொடுத்துள்ளார் எனக்கூறப்படுகிறது.
இதற்கிடையே, நேற்றைய நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க வீரர் கே.எல்.ராகுல் 26 ரன்கள் எடுத்து வெளியேறினார். ரோகித் சர்மா 12 ரன்களுடனும், சட்டீஸ்வர் புஜாரா 12 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர். வெற்றி பெற இன்னும் 157 ரன்கள் தேவை.
This Curran vs Siraj battle is ace !!! #ENGvIND pic.twitter.com/puhRL813jo
— Jutin (@JUSTIN_AVFC_) August 7, 2021