‘சென்னை TO மும்பை’!.. ‘ஒன்றரை மணிநேரம் விமானத்துக்குள்ளே இருந்தோம்’!.. அஸ்வின் பகிர்ந்த சுவாரஸ்யமான விஷயம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னையில் இருந்து மும்பைக்கு விமானத்தில் சென்றபோது நடந்த சுவாரஸ்யமான விஷயங்களை தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் பகிர்ந்துள்ளார்.
இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்டன் மைதானத்தில் வரும் ஜூன் 18-ம் தேதி தொடங்குகிறது. இதனை அடுத்து இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட உள்ளது. இந்திய வீரர்கள் அனைவரும் வரும் ஜூன் 2-ம் தேதி இங்கிலாந்துக்கு செல்ல இருக்கின்றனர்.
அதற்கு முன்னதாக 14 நாட்கள் அவர்கள் குவாரண்டைனில் இருப்பதற்காக மும்பையில் பிசிசிஐ பயோ பபுள் ஏற்படுத்தியுள்ளது. இதற்காக கடந்த 19-ம் தேதி இந்திய வீரர்கள் மும்பை சென்றனர். சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா என 3 இடங்களில் இருந்து தனிவிமானம் மூலம் வீரர்கள் மும்பை வந்தடைந்தனர்.
இந்த நிலையில் இந்த பயணம் குறித்து தமிழக சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் பகிர்ந்துள்ளார். அதில், ‘அனைத்து வீரர்களும் தற்போது மும்பையில் உள்ளோம். ஆனால் நாங்கள் பயணம் செய்த அனுபவம் மிகவும் வித்தியாசமாக இருந்தது. தென்னிந்தியாவை சேர்ந்த ( சென்னை, பெங்களூரு, ஹைதராபாத்) வீரர்களுக்கு சென்னையில் இருந்து தனி விமானம் புறப்பட்டது. அதனால் வேறு மாநில வீரர்கள் சென்னைக்கு காரில் பயணித்து வந்தனர். அவர்கள் நீண்ட தூரம் தனியாக கார் ஓட்டி வந்தது பயோ பபுளை போன்ற ஒன்றுதான்.
முன்பாக மே 14, 16, 18 என மூன்று நாள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நான், மயங்க் அகர்வால், பயிற்சியாளர்கள், பிசியோதரபிஸ்ட் ஆகியோருடன் சென்னையில் இருந்து விமானம் கிளம்பியது. பின்னர் மகளிர் அணி கேப்டன் மித்தாலி ராஜை அழைத்து செல்வதற்காக விமானம் ஹைதராபாத்தில் தரையிறக்கப்பட்டது. அங்கு மித்தாலியுடன் சேர்ந்து இந்திய வீரர் கே.எஸ்.பாரத்தும் உடன் வந்தார்.
சுமார் 2 மணிக்கு சென்னையில் புறப்பட்ட விமானம் மாலை 6 மணிக்கு மும்பை சென்றடைந்தது. ஆனால் அங்கு சென்ற பிறகும் நாங்கள் நீண்ட நேரம் விமானத்திலேயே இருந்தோம். ஏனென்றால் எங்களை ஏற்றி செல்ல வந்த பேருந்து, கடும் மழை காரணமாக ஓடுதளத்திலேயே சிக்கிக்கொண்டது. பேருந்து ஓட்டுநர் பயோ பபுளில் இருந்திருக்க வேண்டும். அதேபோல் பேருந்து சானிடைஸ் செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்த சிக்கலால் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரமாக விமானத்திற்கு உள்ளேயே சிக்கியிருந்தோம். அதன் பிறகுதான் வேறு பேருந்து வந்து எங்களை ஹோட்டலுக்கு அழைத்து சென்றது’ என அஸ்வின் கூறியுள்ளார்.