
‘டீமோட இதய துடிப்பே அந்த 2 பேர்தான்’.. ‘அவங்க மட்டும் அவுட்டாகிட்டா, ICU-ல இருக்குற மாதிரிதான் டீம் இருக்கும்’.. கடுமையாக விமர்சித்த முன்னாள் வீரர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுராஜஸ்தான் அணியில் 2 முக்கிய வீரர்கள் அவுட்டாகிவிட்டால் அந்த அணி ஐசியூ இருக்கும் நிலைக்கு சென்றுவிடும் என ஆகாஷ் சோப்ரா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 45 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி தோல்வியை தழுவியது. அதில் ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜாஸ் பட்லரை (49 ரன்கள்) தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். குறிப்பாக ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 1 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார்.
இப்போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜாஸ் பட்லர் மற்றும் மனன் வோஹ்ரா ஆரம்பம் முதலே அதிரடி காட்ட ஆரம்பித்தனர். இவர்களது கூட்டணியை பிரிக்க நினைத்த சிஎஸ்கே கேப்டன் தோனி, இளம்வீரர் சாம் கர்ரனுக்கு ஓவர் கொடுத்தார். அவர் வீசிய போட்டியின் 4-வது ஓவரில் மனன் வோஹ்ரா (14 ரன்கள்) அவுட்டாகினார். மீண்டும் சாம் கர்ரன் வீசிய 6-வது ஓவரில் சஞ்சு சாம்சனும் அவுட்டாகி வெளியேறினார். பவர் ப்ளே ஓவர்களில் இரண்டு முக்கிய விக்கெட்டுகளை இழந்தது ராஜஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா ராஜஸ்தான் அணியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதில், ‘ராஜஸ்தான் அணியின் இதயமும், இதய துடிப்பும் சஞ்சு சாம்னும், ஜாஸ் பட்லரும் தான். இவர்கள் அவுட்டாகிவிட்டால் அந்த அணி ஐசியூ-ல் (ICU) இருக்கும் நிலைக்கு சென்றுவிடும். பட்லர், சாம்சன் விளையாடினால் அணி பலமாக இருக்கிறது. அதில் ஒருவர் அவுட்டானால், கதை முடிவுக்கு வந்துவிடும், இருவரும் அவுட்டாகிவிட்டால் மொத்தமாக முடிந்துவிடும். இதுதான் அந்த அணியின் சோகமான உண்மை’ என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘எப்போது மனன் வோஹ்ராவையும், சஞ்சு சாம்சனையும் சாம் கர்ரன் அவுட்டாக்கினாரோ, அப்போதே ஆட்டம் மெதுவாக சிஎஸ்கே கைக்கு சென்றுவிட்டது. அந்த அணியின் கடைசி நம்பிக்கை பட்லர் விளையாடிய வரைதான். ஆனால் சிக்சர் அடித்ததும் போல்ட் ஆகி அவரும் வெளியேறினார். இவரைத் தொடர்ந்து சிவம் துபே, டேவிட் மில்லர் என அடுத்தடுத்து விக்கெட்டுகள் சென்றன’ என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
