'நான் சொல்ற மாதிரி செய்யுங்க... உங்களுக்கு இங்கிலாந்தில நான் ஐபிஎல் நடத்தி கொடுக்குறேன்'!.. பிசிசிஐ-யின் ஆசையை தூண்டிவிட்ட வாகன்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்தில் ஐபிஎல் தொடர் நடத்துவதற்கு டெஸ்ட் கிரிக்கெட் தடையாக இருக்கும் நிலையில் அதற்கும் எளிய யோசனையை மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.
கொரோனா காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ஐபிஎல் தொடரை மீண்டும் நடத்துவதற்கான பேச்சுக்கள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஏனெனில், மீதமுள்ள போட்டிகளை நடத்தாவிட்டால் பிசிசிஐக்கு சுமார் ரூ.2,500 கோடி வரை நஷ்டம் ஏற்படும்.
இந்நிலையில், இங்கிலாந்தில் ஐபிஎல் தொடரை நடத்துவதற்காக பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரும் ஜூன் 18 முதல் 22 வரை இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் நடைபெறுகிறது. இதற்காக இந்திய அணி, ஜூன் 2ம் தேதி இங்கிலாந்து புறப்படுகிறது.
அதனையடுத்து ஆகஸ்ட் மாதம் முதல் அங்கேயே இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா பங்கேற்கிறது. இந்த தொடர் ஆகஸ்ட் 4ம் தேதி தொடங்கி செப்.14ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில், ஐபிஎல் தொடரை நடத்துவதற்காக இங்கிலாந்து டெஸ்ட் அட்டவணையில் மாற்றி அமைக்க பிசிசிஐ கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.
செப்டம்பர் 10ம் தேதி ஓல்ட் ட்ராஃபோர்டில் தொடங்கும் கடைசி டெஸ்ட் போட்டியை முன்கூட்டியே ஜுலை 4வது வாரத்தில் நடத்தலாம். இதன் மூலம், செப்டம்பர் மாதம் ஐபிஎல் போட்டிகளை அங்கு நடத்த முடியும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இங்கிலாந்தில் தற்போது ரசிகர்கள் அனுமதிக்கப்படுவதால் நல்ல வருமானமும் கிடைக்கும்.
ஆனால் பிசிசிஐ-ன் கோரிக்கையை ஏற்பதில் இங்கிலாந்துக்கு சிக்கல் உள்ளது. ஏனென்றால் இங்கிலாந்து நாட்டின் உள்நாட்டு தொடரான தி ஹண்ட்ரெட் ஜூலை 21ம் முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியா - இங்கிலாந்து டெஸ்டை ஜூலை மாதத்திற்கு ஒத்திவைத்தால் இங்கிலாந்து வீரர்கள் அந்த உள்நாட்டு தொடரில் பங்கேற்க முடியாமல் போகும் சிக்கல் உள்ளது. இதன் காரணமாகவே பிசிசிஐ-ன் கோரிக்கையை இங்கிலாந்து வாரியம் ஏற்க மறுத்துவிட்டது.
இந்நிலையில் இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் இதற்கு ஐடியா ஒன்றை கொடுத்துள்ளார். அவர், இந்தியா - இங்கிலாந்து இடையே ஆக.4ம் தேதி தொடங்கும் டெஸ்ட் தொடரை சற்று ஒரு வாரத்திற்கு முன்கூட்டியே ஜூலை கடைசியில் தொடங்க வேண்டும். அப்படி தொடங்கினால் இங்கிலாந்து வீரர்களால் ஜூலை 21ம் தேதி தொடங்கும் ஹண்ட்ரெட் தொடரில் பங்கேற்க முடியாது. அதனால் அவர்களுக்கு பதிலாக டெஸ்ட் தொடரில் வாய்ப்பு பெறாத இந்திய வீரர்களை ஹண்ட்ரெட் தொடரில் ஆட அனுமதிக்க வேண்டும். அப்படி பிசிசிஐ அனுமதித்துவிட்டால், பின்னர் செப்டம்பர் மாதத்தில் ஐபிஎல்-ஐ முடித்துவிடலாம்.
மைக்கேல் வாகன் கூறியுள்ள யோசனை பிசிசிஐ-ன் விதிகளுக்கு புறம்பானது ஆகும். இந்திய வீரர்கள் ஓய்வு பெற்ற பின்னரே அயல்நாட்டு தொடர்களில் விளையாட அனுமதிக்கப்படுவார்கள். இங்கிலாந்தில் ஐபிஎல் தொடர் நடைபெற வேண்டும் என்றால் பிசிசிஐ தனது விதிகளில் சில மாற்றங்களை செய்து தான் ஆக வேண்டும்.